"நெல்லை-சென்னை வந்தே பாரத் - கூடுதல் நிறுத்தங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்" அமைச்சர் எல்.முருகன்!!

வந்தே பாரத் ரயில் சேவையின் கூடுதல் நிறுத்தங்கள் குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

நெல்லையில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த வந்தே பாரத் விரைவு ரயிலானது விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் மற்றும் தாம்பரம் ஆகிய 6 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்றும், வாரத்தில் செவ்வாய்கிழமையை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நெல்லையில் இன்று மதியம் 1.10 க்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயில், பயணிகள் வரவேற்புகள், வாழ்த்துக்கள் இடையே  திருச்சி ஜங்ஷன் மாலை 5.15 வந்தது. பள்ளி மாணவ மாணவிகள் பேண்டு வாத்தியம் முழங்கி வரவேற்றனர். பாஜகவினர் கட்சி கொடியேந்தி வந்தே பாரத் ரயிலை வரவேற்றனர்.

பின்னர் 5:25  மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கொடியசைத்து வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் : "கடந்த 2009-14 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் ரயில்வே துறை சார்பில் ரயில்வே மேம்பாட்டிற்காக தமிழகத்திற்கு 800 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில் மட்டும் 6000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், " அமித் பாரத்  திட்டத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு  ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களின் பயன்பாடு பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்க  பரிசீலிக்கப்படும். முன்பதிவு இல்லா பெட்டிகள் இணைக்க வாய்ப்பில்லை" எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், "சென்னை நெல்லை இடையேயான வந்தே பாரத்  ரயில் தற்போது 6 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. கூடுதல் நிறுத்தங்கள் கேட்டு கோரிக்கை வருகிறது. அந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... சென்னை வந்த எடப்பாடி பழனிச்சாமி!!