காவிரி விவகாரம்: "காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும்" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!

காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் வழங்கிய உத்தரவை அமல் படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே நேரம், குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது என்று கூறி 3 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே திறக்கப்படும் என கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. 

இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம், விசாரணை மேற்கொண்டு, தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. 

இதனை கார்நாடக அரசு ஏற்க மறுத்ததால் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. கர்நாடக அரசு சார்பிலும், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுக்கள், நீதிபதிகள், பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் வழங்கிய உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, இருதரப்பு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், காவிரி விவகாரத்தில் இரு மாநில பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பே இறுதியானது என்றும் திட்டவட்டமாக கூறினார். 

இதையும் படிக்க || ”காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்ற பேச்சிற்கே இடமில்லை” - அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!