சென்னை உயர்நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதி பதவியேற்பு...!

சென்னை உயர்நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதி பதவியேற்பு...!

சென்னை உயர்நீதிமன்றத்தின் 33 -வது தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்காபூர்வாலா பதவியேற்றார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் டி.ராஜா கடந்த 24ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த வைத்தியநாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதையும் படிக்க : ஆதீனங்கள் வழங்கிய செங்கோலை...மக்களவையில் நிறுவினார் பிரதமர் மோடி...!

இதற்கிடையே, மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்ததால் குடியரசுத்தலைவர் நியமித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி,  எஸ்.வி. கங்காபூர்வாலா சென்னை உயர்நீதிமன்றத்தின் 33 -வது தலைமை நீதிபதி ஆவார். பதவியேற்பு விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.