அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை!

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை!

உயர்க் கல்விதுறை அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மற்றும் விழுப்புரத்தில் உயர்க் கல்விதுறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் பதிவாகியுள்ள ஒரு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதா என அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மட்டும் எழும்பூர், பெசண்ட் நகர் உட்பட  5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலும் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சரின் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. அதேபோல் அமைச்சரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி உட்பட அமைச்சருக்கு தொடர்புள்ளவர்கள் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. துணை ராணுவத்தினர் உதவியுடன் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  

ஏற்கனவே கடந்த ஜூன் 13-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த அமைச்சராக பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை தொடங்கியுள்ளது. இது அரசியல் வட்டாரங்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிக்க:மின் வினியோக கோளாறு; விம்கோ நகர் - பணிமனை இடையிலான மெட்ரோ ரயில் தற்காலிக நிறுத்தம்!