ஊழலை தடுக்க கடும் சட்டம் இயற்ற வழக்கு; தள்ளுபடி செய்த உயர்நீதி மன்றம்!

ஊழலை தடுக்க கடும் சட்டம் இயற்ற வழக்கு; தள்ளுபடி செய்த உயர்நீதி மன்றம்!
Published on
Updated on
1 min read

ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்கள் தடுப்புச் சட்டங்களை கடுமையாக்கும் வகையில் திருத்தம் செய்யக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாட்டில் ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்களை தடுக்கும் வகையில் உள்ள சட்டங்களை கடுமையாக்கும் வகையில் திருத்தம் செய்யக் கோரி மத்திய சட்ட ஆணையம், மாநில சட்ட ஆணையத்துக்கு அளித்த மனுவை பரிசீலிக்க கோரி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர், தனது உண்மைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் ஒரு லட்சம் ரூபாயை  டிபாசிட் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்திருந்தனர்.

 ஒரு லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டதை அடுத்து, வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டங்களில் என்னென்ன திருத்தங்களை செய்ய வேண்டும் எனச் சொல்கிறீர்கள் என தலைமை நீதிபதி, மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும், குறிப்பிட்ட சட்டங்களை, குறிப்பிட்ட வகையில் திருத்தம் செய்யும்படி நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் எப்படி உத்தரவிட முடியும் எனவும், சட்ட ஆணையம் சட்டம் இயற்ற முடியாது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதைத்தொடர்ந்து, வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ள மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், வழக்கில் உண்மைத்தன்மையை நிரூபிக்க செலுத்திய ஒரு லட்சம் ரூபாயில் 25 ஆயிரம் ரூபாயை ஏதேனும் ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், மீதமுள்ள 75 ஆயிரம் ரூபாயை மனுதாரருக்கு வழங்க, உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com