தெலங்கானாவில் கைது செய்யப்பட்ட பாஜக மாநிலத் தலைவரும் எம்பியுமான பண்டி சஞ்சய் குமார், பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
10ம் வகுப்பு தேர்வுத்தாள் கசிவு தொடர்பாக கடந்த 5ம் தேதி பண்டி சஞ்சய் கைது செய்யப்பட்ட நிலையில், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தெலங்கானா செல்லும் 4 நாட்களுக்கு முன்னர் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மாநில டிஜிபியிடம், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கைது தொடர்பாக போனில் அழைத்துப் பேசினர். இந்நிலையில், சாட்சியிடம் பேசக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், உள்ளிட்ட நிபந்தனைகளுடன் 2 நாட்களிலேயே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக தெலுங்கானாவில் 10ஆம் வகுப்பு இந்தி பாடத்திற்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்னரே வாட்சப்பில் வெளியானது. இதுகுறித்து விசாரணை நடத்திய தெலுங்கானா காவல்துறை பிரசாந்த் என்பவரை கைது செய்தது. பிரசாந்த்திடம் பாஜக தலைவர் பண்டி சஞ்சயுக்கு தொடர்பு இருந்ததாகவும் அவருடன் தொலைபேசியில் பேசியதற்கு ஆதாரம் கிடைத்துள்ளதால் பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் கைது செய்யப்பட்டதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப் பட்டது.