எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பதில் தகராறு; அதிமுகவினர் இடையே தள்ளு முள்ளு!

எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பதில் தகராறு; அதிமுகவினர் இடையே தள்ளு முள்ளு!

தூத்துக்குடி விமான நிலையம் வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பதில் அதிமுகவினரிடைய தகராறு ஏற்பட்டு தள்ளு முள்ளு நடந்துள்ளது.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு இன்று வந்திருந்தார். அவருக்கு மாவட்ட  அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக வாகைகுளம் விமான நிலையத்தில் அதிமுக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க வரவேற்க கோவில்பட்டியை சேர்ந்த சீனி ராஜ் என்பவரும் விமான நிலையம் வந்திருந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவில் பட்டி சீனிராஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நபர் என்றும் கட்சியை காட்டிக் கொடுத்த நபர் என்றும்  திட்டிய கடம்பூர் ராஜூ ஆதரவாளர்கள், நீ இங்கே வரக்கூடாது என ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  அப்போது கடம்பூர் ராஜூ ஆதரவாளர்கள் சீனிராஜை தள்ளி விட்டு தாக்க முயன்றனர். இதனிடையே அங்கு கூடியிருந்த காவல் துறையினர் அவர்களை விலக்கி விட்டு சமாதானப்படுத்தினர். இச்சம்பவத்தால் வாகைகுளம் விமான நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க: கீழ்நமண்டி அகழாய்வு; 2500 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமப் பேழைகள் கண்டுபிடிப்பு!