தேர்தல் விதிமுறைகளை மீறியதா திமுக கூட்டணி...இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தேர்தல் விதிமுறைகளை மீறியதா திமுக கூட்டணி...இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முக்கிய சாலைகளில் கொடி கம்பம் நடப்பட்டுள்ள விவகாரம் இணையத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அமைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் கூட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பரப்புரை ஆற்றினார். இந்த சூழ்நிலையில், அந்த தொகுதியில் உள்ள முக்கிய சாலையில் திமுக கூட்டணி கட்சிகள் தங்கள் கொடி கம்பத்தை கட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, அரசியல் கட்சிகள் சாலையில்  வைக்கும் பேனர்களாலும், கொடி கம்பங்களாலும் அவதிக்குள்ளாவது பெரும்பாலும் பொதுமக்கள் தான். அவர்கள் வைக்கும் பேனர்கள், கட்சி கம்பங்கள் உள்ளிட்டவையால் சாலைகள் குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதுவே, சில நேரங்களில் பேனர்கள் மக்கள் மீது சாய்ந்து பல்வேறு விபரீதத்தையும் ஏற்படுத்துவதோடு, சில உயிர்களையும் காவு வாங்கியுள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை பள்ளிக்கரணை அருகே அதிமுகவின் பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் ஒருவர் பலியான சம்பவம் அப்போது மிகப்பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது. 

ஆனாலும், ஆபத்தை உணராத அரசியல் கட்சிகள் தேர்தல் நேரங்களில் தங்களது கட்சி கொடியை கட்டி பிரசாரம் செய்வதை விடுவதாக தெரியவில்லை. அந்தவகையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அத்தொகுதியில் உள்ள அகில்மேடு 7வது வீதியில், தேர்தல் விதிமுறைகளை மீறி, சாலைகளில் திமுக கூட்டணி கட்சிகள் கொடி கம்பங்களை நட்டுள்ளது. 

அந்த பகுதியில் மிக முக்கியமான சாலையாக கருதப்படும் இவ்வீதியின் வழியாக தான் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் செல்லும் என்பதால், இவர்கள் கட்டியிருக்கும் இந்த கொடி கம்பம் அதற்கு மிகவும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஏற்கனவே, சாலைகளில் எந்தவித விதிமீறல்களிலும், பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையிலும் செயல்பட கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திமுக கூட்டணி சாலைகளில் கொடி கம்பம் வைத்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com