செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கும் அதிகாரம், சிறப்பு நீதிமன்றத்திற்கா? அமர்வு நீதிமன்றத்திற்கா?

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கும் அதிகாரம், சிறப்பு நீதிமன்றத்திற்கா? அமர்வு நீதிமன்றத்திற்கா?
Published on
Updated on
1 min read

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கும் அதிகாரம் எந்த நீதிமன்றத்திற்கு என குழப்பம் நேர்ந்துள்ளது. 

கடந்த திங்கட்கிழமை அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதுவரை இந்த வழக்கு அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகையை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனையடுத்து நீதிமன்ற விசாரணைக்காக இந்த வழக்கு எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டபோதே அவருக்கு ஜாமின் கேட்டு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவியிடம் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை நிராகரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி இதற்கான அதிகாரம் தமக்கு இல்லை என்றும் ஜாமின் மனுவை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் தெரிவித்தார். 

நேற்று சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கவனத்திற்கு எடுத்துக்கொண்டார். இதனையடுத்து இன்று ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து மீண்டும் ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவியிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்துள்ளனர். அப்போது, செய்தியாளர்கள் யாரும் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

பின்னர், முறையீடு முடிந்த பிறகு மேற்கொண்டு இந்த நீதிமன்றத்தில் நடைபெற உள்ள இந்த வழக்கின் விசாரணைகளை நேரில் காண அனுமதிக்கக்கோரி செய்தியாளர்கள் நீதிபதி ரவியிடம் அனுமதி கேட்டனர். ஆனால், யாரையும் அனுமதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதி உடனடியாக நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற வேண்டும் என கோபத்துடன் தெரிவித்தார்.

இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கும் அதிகாரம் யாருக்கு என்ற கேள்வி  நீதிமன்ற வட்டாரங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com