தமிழ் மொழியின் மீது எந்த மொழியையும் திணிக்க முடியாது -ஆளுநர்

தமிழ் மொழியின் மீது எந்த மொழியையும் திணிக்க முடியாது -ஆளுநர்

தமிழ் மொழியின் மீது ஹிந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி ராஜ்பவன் தர்பார் ஹாலில் ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக மாணவ, மாணவியருடன் தமிழ்நாடு தர்ஷன் எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏழு நாள் சுற்றுப்பயணமாக பனாரஸ் பல்கலைக் கழகத்திலிருந்து 18 மாணவ மாணவியர் மற்றும் இரண்டு பேராசிரியர்கள் தமிழ்நாடு வந்துள்ள நிலையில் இன்று இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

அப்போது மாணவ மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு 3500  ஆண்டுகளுக்கு மட்டுமல்ல அதற்கும் முந்தைய வரலாறும் உண்டு. ஹிந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என தெரிவித்த ஆளுநர் ரவி, தமிழ் மீது ஹிந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்ற கருத்தை தெரிவித்தார்.

மேலும் பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை கற்றுக் கொள்ள நினைப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என கூறிய ஆளுநர் தமிழை ஆழமாக படிக்க வேண்டும். தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும் என்றார். அத்தோடு பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு வரவழைத்து ராஜ் பவன் சார்பில் அவர்களுக்கு தமிழ் தரிசனம் நிகழ்ச்சி பாரம்பரியமாக இனி நடத்தப்படும் என்றார்.

மேலும், 2047 ஆம் ஆண்டு இந்தியா முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாகவும்,உலகிற்கு தலைமை ஏற்கும் நாடாகவும் விளங்கும் என கூறிய ஆளுநர் ரவி,பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் இளங்கலை பயிலும் மாணவர்கள் நிச்சயம் உயர்கல்வியை தமிழ் பயில வேண்டும் என்றும் இது என்னுடைய வேண்டுகோள் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து, திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துகளையும் வழங்கும் நூல். எனவே அனைவரும் திருக்குறளை ஆழமாக பயில வேண்டும் என்றும் திருக்குறள் போல் தமிழில் பல இலக்கியங்கள் உள்ளன என தெரிவித்தார்.