நிறுத்தி வைக்கப்பட்ட 12 மணிநேர வேலை சட்ட மசோதா....முழுமையாக திரும்ப பெறப்படுமா!!!

நிறுத்தி வைக்கப்பட்ட 12 மணிநேர வேலை சட்ட மசோதா....முழுமையாக திரும்ப பெறப்படுமா!!!

தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, 12 மணிநேர வேலை திருத்த சட்ட செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சட்ட மசோதா :

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.  இதற்கு திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.  இதேபோல், அதிமுக, பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்ட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துடன், தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மசோதாவை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தின.  தொழிலாளர் விரோத மசோதாவுக்கு எதிராக மே 12-ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. 

ஆலோசனைக் கூட்டம்:

இதனையடுத்து 12 மணி நேர வேலை தொடர்பான மசோதாவின் சாதக பாதகங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  அமைச்சர்கள் ஏ.வ வேலு, தங்கம் தென்னரசு, சி.வி. கணேசன் உள்ளிட்டோர் உடனான இந்த ஆலோசனையின்போது, தொழிற்சங்க பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

நிறுத்தம்:

இந்நிலையில், தொழிலாளர் நலத்துறையின் 12 மணிநேர வேலை திருத்த சட்ட செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.   இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளின் அடிப்படையில் மசோதா செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

திரும்ப பெறப்படுமா?:

இதனிடையே, தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்தத்தை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி கூட்டணி கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், 12 மணிநேர வேலை திருத்த சட்ட செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்தார்.  அதே நேரத்தில், இந்த சட்டத் திருத்தத்தை தமிழ்நாடு அரசு படிப்படியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com