ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்கள் கைது...!

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்கள் கைது...!

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழ் தேச மக்கள் முன்னணியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

தமிழ் தேச மக்கள் முன்னணி சார்பில் இன்று காலை, சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருந்து ஆளுநர் ஆர் என் ரவியை வெளியேற்ற வேண்டும் என்ற முழக்கங்ககளை எழுப்பிய வண்ணம் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் புறப்பட்டனர்.

இந்நிகழ்வில், தமிழ்த் தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன், தமிழ்நாட்டின் பாரம்பரிய பகுத்தறிவு, மதசார்பற்ற மரபு, ஜனநாயக மரபுக்கு விரோதமாக, கிண்டி ராஜ்பவனை ஆர் எஸ் எஸ் அலுவலகமாகவும், பாஜகவின் கூடாரமாக நடத்தி வரும் ஆளுநர் ஆர் என் ரவி தமிழ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றார்.

இதையும் படிக்க : தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!

தொடர்ந்து பேசியவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கே அதிகாரம் இருப்பதாகவும், நியமிக்கப்பட்டவருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியவர், மோடி அரசுக்கு எதிராக தமிழ் தேசிய சட்டமன்றத்தின் அடையாளத்தை அதிகாரத்தை கோரி தான் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக கூறினார்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளும் ஒற்றை முழக்கமாக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது.  எனவே, தமிழ்நாட்டின் எந்த இடத்திற்கு ஆளுநர் போனாலும் அவருக்கு எதிராக முழக்கங்கள் எழும், சட்ட மன்றத்தில் இருந்து ஆளுநர் வெளியேறியது போல கூடிய விரைவில் தமிழகத்தில் இருந்தும் வெளியேற வேண்டும் என்று பேசினார்.

தொடர்ந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்து பேருந்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.