
தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் வரும் 26ம் தேதி மாலை 5 மணியளவில் பேச்சுவார்த்தை நடைப்பெறும் என தொழிலாளர் நலத்துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம்:
விரைவு போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுநர்களை நியமிக்கும் பணிகளை நிர்வாகம் மேற்கொண்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட சிஐடியு தொழிற்சங்கத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து 8 போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த 22 மண்டல அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) கீழ் இயங்கும் சங்கங்களின் நிர்வாகிகள், கடந்த 18ம் தேதி வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியதோடு, தொழிலாளர் துறைக்கும், காவல் துறைக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கடிதம்:
இந்நிலையில் வேலைநிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு தொழிற்சங்கத்தினருக்கு தொழிலாளர் நலத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் வரும் 26-ம் தேதி மாலை 5 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில்..:
சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகம், தொழிலாளர் நல வாரிய கட்டடத்திலுள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் நடைபெறும் இப்பேச்சுவார்த்தைக்கு சம்பந்தப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் மற்றும் போக்குவரத்து நிர்வாகங்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், வேலைநிறுத்தம் போன்ற நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் பொது அமைதி காத்திடுமாறும் சமரச பேச்சுவார்த்தையின் சுமூக முடிவை எதிர்நோக்குமாறும் தொழிற்சங்கத்துக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளும் கருணை மதிப்பெண்ணும்!!