கவர் ஸ்டோரி

மகாராஜா படத்தின் கதை தன்னுடையது என புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் ஒருவர்.

கிளம்பியது புது சர்ச்சை...

malaimurasu.com

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இரண்டாவதாக இயக்கிய படம்தான் மகாராஜா. விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வெற்றிப் படத்தை கொடுத்த மகிழ்ச்சியில் விஜய்சேதுபதி இருந்தார்.

இந்நிலையில் மகாராஜா படத்தின் கதை தன்னுடையது என்றும், தனது கதையை திருடி வேறொரு பெயரில் எடுத்திருப்பதாகவும் பொங்குகிறார் தயாரிப்பாளர் ஒருவர். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் நாகன் என்கிற மருதமுத்து. கந்தவேல் என்கிற படத்தை தயாரித்த இவர் சில காரணங்களால் அந்த படத்தை வெளியிடாமல் இருந்துள்ளார்.

இதற்கிடையே பழனியில் செய்தியாளர்களை சந்தித்தவர், தற்போது திரையரங்கில் சக்கை போடு போட்டு வரும் மகாராஜா படத்தின் கதை தனக்கு சொந்தமானது என கூறினார். பழனி அருகே மானூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தன்னிடம் கதை சொன்னதாகவும், இதனை 10 லட்ச ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியதாகவும் மருதமுத்து கூறினார்.

அத்தியாயம் ஒன்று என பெயரிடப்பட்ட அந்த கதையை முறையாக பதிவு செய்து முதலில் குறும்படமாக எடுத்து முடித்து படத்தொகுப்புக்காக சென்னையில் ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்தாராம். ஆனால் இந்த கதையை இயக்குநர் நித்திலன் சாமிநாதன் திருடி அதனை மகாராஜா என்ற பெயரில் இயக்கியிருப்பதாக சரமாரி குற்றச்சாட்டு வைத்தார்.

2020-ம் ஆண்டிலேயே முழு நீள படமாக எடுப்பதற்கு திட்டமிட்ட நிலையில் இதில் சார்லி முக்கிய வேடத்தை ஏற்க, இவருடன் கே.எஸ்.ரவிக்குமார், ரக்ஷனா, அம்மு அபிராமி ஆகியோரை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்து பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாம். ஆனால் அப்போது ஏற்பட்ட கனமழையின் காரணமாக நடக்கவிருந்த படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டு பின்னர் கைவிடப்பட்டதாக மருதமுத்து கூறினார்.

குறும்படத்தின் படத்தொகுப்பு வேலைகளின்போது தனது கதையை திருடி விட்டதாகவும், இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் பாக்யராஜ், பாரதிராஜா ஆகியோரிடம் புகார் தெரிவித்ததாகவும் தெரிவித்தார். இதன் மூலம் தனக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக கூறிய மருதமுத்து, இயக்குநர் நித்திலன் சாமிநாதனை கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்.

திரைப்படம் வெளியாகி 11 நாட்கள் கழித்து வெடித்துள்ள இந்த புதிய சர்ச்சை, மகாராஜா படக்குழுவினருக்கு திடீர் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.