கவர் ஸ்டோரி

18 வருடங்களுக்கு பிறகு கர்ப்பம் தரித்த பெண்...ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் !!

திருமணமாகி 18 வருடங்களாக குழந்தை இல்லாத பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

Tamil Selvi Selvakumar

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அதிரம்புழ பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் - பிரசன்னா குமாரி தம்பதி. இந்த தம்பதிக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், இந்த தம்பதி கடந்த 18 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்துள்ளனர்.

பொதுவாகவே ஒரு தம்பதி திருமணமாகி ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால், அவர்களை வீட்டில் உள்ளவர்களும், உறவினர்களும் இணைந்து கண்டதை பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்குவர். அந்த வகையில் கடந்த 18 வருடங்களாக குழந்தை இல்லாமல் பல இன்னல்களை சந்தித்து வந்த பிரசன்னா குமாரி, 10 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமானார். குழந்தை இல்லாமல் தவித்து வந்த தம்பதிக்கு இந்த கர்ப்பம்  தரித்த செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செய்தியை கேட்டதிலிருந்து மனைவியை கணவர் சுரேஷ் கண்ணும் கருத்துமாய் கவனித்து வந்தார்.

18 வருடங்களாக குழந்தை இல்லாமல் அவர்கள் அனுபவித்த இன்னல்களையெல்லாம் மறக்கும் அளவிற்கு அந்த பெண்ணையும், அவர் சுமந்த கருவையும் கவனத்துடன் பார்த்து வந்தார் சுரேஷ். 

இந்நிலையில் முழுமாத கர்பிணியாக இருந்த பிரசன்னா குமாரிக்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இந்த செய்தியை அறிந்த கணவர் சுரேஷ் உடனடியாக கோட்டயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் பெண்ணை பரிசோதித்த போது வயிற்றில் நான்கு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. 

அதற்கு பிறகு மிக கவனமாக செயல்பட்டு வந்த மருத்துவர்கள் பெண்ணின் வயிற்றில் இருந்த 4 குழந்தைகளையும்  அறுவை சிகிச்சை மூலம் பத்திரமாக வெளியே எடுத்தனர். 
இதனையடுத்து பிரசன்னாவின் 4 குழந்தைகளையும் கணவர் சுரேஷிடம் செவிலியர் தந்தனர்  . அப்போது அந்த 4 பிஞ்சு குழந்தைகளின் முகத்தையும் பார்த்த சுரேஷுக்கு 18 வருடமாக இருந்த மனகுமறல்கள் அனைத்தும் நீங்கியது.

இதனைத்தொடர்ந்து பிரசன்னாவின் பிரசவம் குறித்து பேசிய மருத்துவர் ஒருவர், எங்கள் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தது இதுவே முதல்முறை என்பதால், அந்தப் பெண்ணின் பிரசவ செலவை மருத்துவமனை நிர்வாகமே ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், தற்போது நான்கு குழந்தைகளும், தாயும் நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பிரசவம் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்திருப்பதாகவும் மருத்துவர் தெரிவித்திருக்கிறார்.