கவர் ஸ்டோரி

7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...எப்படி எதிர்க்கொள்ள போகிறார் ஓ.பி.எஸ்!

Tamil Selvi Selvakumar

அதிமுக அலுவலகம் கலவர சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஜூலை 11 :

கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஈபிஎஸ் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

கலவரம்:

அன்றைய தினமே, அதாவது அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற கடந்த ஜுலை 11 ஆம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு  எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். உருட்டுக்கட்டை மற்றும்  கற்களால் நடத்தப்பட்ட இந்த  தாக்குதலில் 2 போலீசார் உட்பட 47 பேர் காயமடைந்தனர். அதேபோன்று காவல்துறைக்கு சொந்தமான 4 வாகனம் உட்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. 

ஆவணங்களை எடுத்துச்சென்ற ஓ.பி.எஸ்:

பொதுக்குழு கூட்டத்தை தொடர்ந்து, எடப்பாடி தரப்பினர் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது,, அறைகளில் இருந்த ஆவணங்கள் சிதறி கிடந்ததால், அலுவலகத்தில் இருந்த கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் திருடிச்சென்றதாக, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி சண்முகம் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  

சிபிஐடி விசாரணைக்கு மாற்றம்:

அதிமுக அலுவலக கலவரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக அலுவலக வன்முறை தொடர்பான 4 தனித்தனி வழக்குகளும்  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

ஓ.பி.எஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு:

அதிமுக அலுவலக கலவரம் தொடர்பான வழக்குகள் சிபிஐடிக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, ஓபிஎஸ்,  வைத்தி லிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல், கலகம் செய்தல், பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை  ராயப்பேட்டை போலீசார் இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அடுத்தடுத்த பரபரப்பு:

அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே, அடுத்தடுத்து  என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பொதுக்குழு கூட்டம், கலவரம், நீதிமன்றத்தை நாடுதல் என அடுத்தடுத்து ஈபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் மோதிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது, அதிமுக அலுவலக கலவரம் தொடர்பாக போடப்பட்டுள்ள வழக்குப்பதிவை ஓபிஎஸ் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...