கவர் ஸ்டோரி

மிஸ் ஆகாத ஸ்டாலின் ஸ்கெட்ச்,..கொங்கு கோட்டையின் அஸ்திவாரத்தை உருவும் செந்தில் பாலாஜி,..சசிகலாவோடு பேசியவர்கள் திமுகவில் இணைந்த பின்னணி.! 

Malaimurasu Seithigal TV

தற்போதைய அதிமுகவின் ஹாட் டாப்பிக்கே சசிகலாவிடம் பேசியதற்காக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அமமுகவில் சேராமல் திமுகவில் சேர்ந்தது தான். 

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவிட்டு சிறையில் இருந்து வெளிவந்ததும் இனி சசிகலா அரசியலில் தீவிரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைதியாக இருந்த அவர் தேர்தலை ஒட்டி அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று அறிவித்தார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவி எதிர்க்கட்சியானதும் ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவுக்கு அதிர்ச்சியலைகளை கொடுத்து வருகிறார். 

ஆரம்பத்தில் பொறுத்துப் பார்த்த பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒருகட்டத்தில் பொறுமையிழந்து சசிகலாவோடு பேசிய அதிமுக தொண்டர்களை கட்சியிலிருந்து நீக்கினர். அதிலும் முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது அதிமுகவிலே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதின் தொடர்ச்சியாக சசிகலாவோடு பேசியதாக ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சார்ந்த வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், அதிமுக கோபி நகர் செயலாளர் காளியப்பன் ஆகியோர் உட்பட சில கொங்கு மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதன்பின் இவர்கள் அமமுகவில் இணைவார்கள் அல்லது சசிகலா ஆதரவாளர்களாக தொடந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென திமுகவிலிருந்து இணைந்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார்கள். இது கொங்கு மண்டல அதிமுகவிலேயே சலசலப்பை ஏற்படுத்தியது. 

இவர்கள் திமுகவில் இணைந்ததற்கு பின்னால் ஸ்டாலினின் மாஸ்டர் பிளான் அடங்கியுள்ளதாக கொங்கு திமுகவில் பேசிக்கொள்கிறார்கள். சட்டமன்ற தேர்தலில் திமுக 150 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட  நிலையில் 125 இடங்களில் தேங்கியது. இதற்கு முக்கிய காரணம் கொங்கு மண்டலம் தான். அதேபோல 2016 தேர்தலில் திமுக ஆட்சியமைப்பதை தடுத்ததும் கொங்கு மண்டலம் தான். இதன் காரணமாக கொங்கு மண்டலத்தை வசப்படுத்த திமுக கடுமையாக முயன்று வருகிறது. 

கொங்கு மண்டலத்தின் திமுகவின் மிகப்பெரிய  தலைவராக இருப்பவர் செந்தில் பாலாஜி தான். ஆகவே கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுப்படுத்தும் பொறுப்பும் அவருக்கே ஸ்டாலின் கொடுத்துள்ளார். சசிகலாவிடம் பேசியதாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட காளியப்பன்,சிந்து ரவிச்சந்திரன் ஆகியோர் அவர்கள் பகுதியில் வலிமையானவர்களாக இருந்தவர்கள். கீழ் மட்டம் வரை நெருங்கிய தொடர்புடையவர்கள். இவர்களை சசிகலா பக்கம் தொடர்ந்து செல்லவிடாமல் திமுக பக்கம் இழுத்தது செந்தில் பாலாஜி தான் என்று கூறப்படுகிறது.  

இவர்களை அதிமுக நீக்கியதும் உடனடியாக அவர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, சசிகலாவோடு தொடர்ந்து இருப்பதால் உங்களுக்கு எந்த லாபமும் இல்லை, அவரது அரசியல் எதிர்காலம் பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், திமுகவில் இணைந்தால் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று கூறி அவர்கள் மனதை மாற்றியுள்ளார். இதனால் தான் அவர்கள் திமுகவில் இணைந்துள்ளார்கள். இவர்கள் இணைந்ததால் அவர்கள் பகுதியில் கட்சி நன்கு வளர்ச்சியடையும். அந்த அளவு கள்ப்பணியில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்று திமுக தரப்பில் நம்பப்படுகிறது.