கவர் ஸ்டோரி

அஜித்தை சீண்டிய அந்தணன்... கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பதிவிட்ட அஜித் ரசிகர்கள்...

நடிகர் அஜித்குமார் குறித்து கருத்து தெரிவித்த யூ-டியூபர் அந்தணனை இறந்து போனதாக கூறி அஜித் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். வலைப்பேச்சு அந்தணன், நடிகர் அஜித் பற்றி பேசியது என்ன? ஏன் இந்த களேபரம்?

மாலை முரசு செய்தி குழு

கண்ணீர் அஞ்சலி....

வலைப்பேச்சு அந்தணன் அகால மரணமடைந்து விட்டார்..

நடிகர் அஜிதகுமார் குறித்து வலைப்பேச்சு அந்தணன் இழிவாக பேசியதாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தால் அந்தணன் காலமாகி விட்டதாகவும் சமூகவலைதளங்களில் அஜித் ரசிகர்களால் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் பரப்பப்பட்டு வருகிறது.

வலைப்பேச்சு என்ற பெயரில் யூ-டியூப் சேனலை நடத்தி வருபவர் சினிமா விமர்சகர் அந்தணன். மூன்று பேர் அமர்ந்து கொண்டு சினிமா நடிகர்கள் குறித்தும், அடுத்து வரவிருக்கும் பெரிய படங்களின் கதை இதுதான் என்றும் மனம் போன போக்கில் பேசி வருவது இவர்களின் வழக்கம்.

அந்த வகையில் அஜித்குமார் குறித்து அந்தணன் ஒரு தகவலை கூறியிருந்தார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு நடிகர் அஜித்குமார் 35 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியதாக ரசிகர் ஒருவர் தன்னிடம் கேட்டதாக வீடியோவில் கூறியிருந்தார்.

நடிகர் அஜித்குமார் நிவாரண நிதி வழங்கியது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், இவ்வாறு பொய்யான தகவல்களை கூறி தங்கள் ஆதர்ச நாயகனை கேலி செய்வதா என அஜித் ரசிகர்கள் கொதித்துப் போயினர்.

இதையடுத்து அஜித் ரசிகர்கள், வலைப்பேச்சு அந்தணன் இறந்து போனதாக ஆர்.ஐ.பி. பதிவுகள் போட்டதோடு மட்டுமல்லாமல், கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களையும் டிசைன் செய்து பதிவிட்டனர்.

மனஉளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்ததாகவும், வாழ வேண்டிய வயதில் வாடிய மலராகி உதிர்ந்து போன உங்களை எப்படி மறப்பது என்றும், விதவிதமாக மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.

நிவாரண நிதியை கொடுத்ததாக வதந்தி பரவியதை விமர்சித்ததையே பொறுக்க முடியாத அஜித் ரசிகர்கள், இவ்வாறு கண்ணீர் அஞ்சலி பதிவு போட்டிருப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்வதை விடுத்து தனிப்பட்ட ஒருவரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், உயிருடன் உள்ளவரை இறந்து போனதாக பதிவிடுவதும் முறையா? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து மாலைமுரசு தொலைக்காட்சி சார்பில் வலைப்பேச்சு அந்தணனிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், அஜித் ரசிகர்கள் முட்டாள் தனமாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டார்.

மேலும் நிவாரண நிதி கொடுக்கப்பட்டது சர்ச்சையான நிலையில் அஜித்குமார், தன் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என கூறினார்.

மேலும் அஜித், தனது ரசிகர்களுக்காக எதையுமே செய்யாதவர் என்றும் கூறினார். அஜித் ரசிகர் ஒருவர் தவறி விழுந்து இறந்தபோது, நிதியுதவியும் ஆறுதலும் தெரிவிக்காதவர் அஜித் என கூறினார்.