கவர் ஸ்டோரி

என்ன புத்தாக்கம் தரும் ரீயூசபல் புத்தகங்களா? அதுவும் பலமுறை எழுதக்கூடியதா?

Tamil Selvi Selvakumar

கொரோனா காலத்தின் இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, சிறப்பு ஆசிரியர்களால் பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட பலமுறை பயன்படுத்தக் கூடிய புத்தகங்கள், 45ஆவது சென்னை புத்தகக் காட்சியில் இடம்பிடித்துள்ளன. பெற்றோர்களை ஈர்த்துள்ள இந்த புத்தகங்கள் குறித்த செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்.

காலத்திற்கு ஏற்ப குழந்தைகள் கல்வி பயிலும் முறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. சிலேட்டு,  பல்பம் என இருந்த நிலை மாறி, தற்போது பலமுறை எழுதக்கூடிய ’ரீயுசபல் புத்தகங்கள்’ வந்து விட்டன. கொரானா காலகட்டத்தில் மழலைகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதால், கல்வித் திறன் குறைந்து வருவதாக பெற்றோர்கள் கவலையில் உள்ளனர். அவர்களது கவலைகளைத் தீர்க்கும் வகையில், படங்களுக்கும் வார்த்தைகளுக்கும் ஏற்ப எழுத்துக்களை எழுதி, குழந்தைகள் கல்வி கற்கும் வகையிலான பல முறை பயன்படுத்தும் ரியூசபல் புத்தகங்கள், 45வது சென்னை புத்தகக் காட்சியில் விற்பனைக்கு வந்துள்ளன.

கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல், செல்போனிலும், தொலைக்காட்சியிலும் மூழ்கியிருக்கும் மழலைச் செல்வங்களின், அடிப்படை கல்வியை மேம்படுத்துவதற்கு இந்த புத்தகங்கள் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதாலேயே, இந்த ரீயூசபல் புத்தகங்களை உருவாக்கியதாக கூறுகிறார், இந்த புத்தகங்களின் தயாரிப்பாளரான காமாட்சி சீனிவாசன். 

’கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றயவை’

என்ற திருக்குறளின் விளக்கத்திற்கு ஏற்ப கல்வி மட்டும் ஒருவனுக்கு இருந்துவிட்டால், அதைவிட பெரிய செல்வம் எதுவும் அவன் வாழ்க்கை முழுவதிலும் வந்துவிட போவதில்லை. அழியாத செல்வத்தை பல முறை எழுதி, அதனை அழித்து மீண்டும் எழுதினாலும், கல்வி மட்டும் மழலைகளின் மனதில் நிலைத்து இருக்க இந்த ரியூசபல் புத்தகங்கள் அதிகம் பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை...