கவர் ஸ்டோரி

ஒரு நாளைக்கு ரூ.30 லட்சம்... லிஸ்டில் விஜயபாஸ்கர் பெயர்!! செம்ம ஸ்கெட்ச் போட்டு கொடுக்கும் செந்தில் பாலாஜி..

Malaimurasu Seithigal TV

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. ஆனால் 150 தொகுதிகளுக்கும் மேல் எதிர்பார்த்த திமுக 125 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இதற்கு காரணம் கொங்கு மண்டலத்தில் திமுக பெரிய பின்னடைவை சந்தித்ததே. இப்போது மட்டுமல்ல, கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் கொங்கு மண்டலம் தடுத்து விட்டது.

இதன் காரணமாக எப்படியும் கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுப்படுத்துவதையே தனது முக்கிய பணியாக திமுக தலைமை கருதுகிறது. கொங்கு மண்டலம் எப்போதுமே அதிமுகவுக்கு சாதகமாக இருந்துவருகிறது. இதற்கு காரணம் கொங்கு மண்டலத்தில் வலிமையான அதிமுக தலைவர்கள் தொடர்ந்து உருவாகி வருகிறார்கள். ஆனால் திமுக இதற்கு அப்படியே தலைகீழாக இருக்கிறது. முகம் தெரிந்த கொங்கு திமுக தலைவர்களுக்கே அங்கு பற்றாக்குறை நிலவுகிறது.

எனவே கொங்கு மண்டலத்தில் வலிமை வாய்ந்த திமுக தலைவரை திமுக தலைமை உருவாக்க நினைப்பது போல வலிமையான அதிமுக தலைவர்களின் செல்வாக்கை குறைக்கவும் முடிவு செய்துள்ளது. அதன்படி அங்கு வலிமையாக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது இருக்கும் ஊழல் புகார்களை திரட்ட முடிவுசெய்துள்ளது. 

இதன் காரணமாக கொங்கு முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் திரட்டப்பட்டு வரும் நிலையில் இந்த வரிசையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரையும் சேர்க்க திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக முயன்று வருகிறார். அதிமுகவின் அனைத்து அமைச்சர்களும் ஊழல் புகாரில் சிறை சென்றால் அக்கட்சியின் செல்வாக்கு கடுமையாக சரியும் என்று தலைமைக்கு கூறி வருகிறார். 

அவரது இந்த முயற்சிக்கு திமுக தலைமையும் தலையாட்டி விட்டதாகவும் கூடிய விரைவில் விஜயபாஸ்கர் மீதான ஊழல் புகார்களும் விசாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அவர் மீது ஏற்கனவே குட்கா புகார் இருக்கும் நிலையில் கடந்த ஆட்சியில் டாக்டர்கள், நர்ஸ்களுக்கான தங்குமிடம், உணவை முறைப்படுத்தியதில் தினந்தோறும் ரூ.30 லட்சம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அந்த வழக்கும் தற்போது கிளறப்படுகிறது. ஆகவே கூடிய விரைவில் விஜயபாஸ்கர் மீது ஊழல் புகார்கள் வரிசைகட்டும் என்று கூறுகிறார்கள் திமுக உடன்பிறப்புகள்.