பிரபலங்கள் முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது மற்றும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் (panama papers) வெளியாகி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) ஆவணங்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மூலம் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களில் இருந்து கசிந்த 11.9 மில்லியன் ஆவணங்களை 600க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர். இதில், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும் அம்பலமாகியுள்ளது. இந்த பட்டியலில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.
நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பி செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவரது சகோதரி, தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கியதும் தெரியவந்துள்ளது. இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியான மூன்று மாதங்களில் விர்ஜின் தீவுகளில் உள்ள தனது நிறுவனத்தை கலைக்கும்படி சச்சின் கேட்டுக்கொண்டதாகவும் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.