கவர் ஸ்டோரி

கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொள்ளும் நெருக்கடிகள் - மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் சிறப்பு கட்டுரை!

Tamil Selvi Selvakumar

கொரோனா பெருந்தொற்றுப் பரவலை தடுத்து நீக்கிட ஒன்றிய மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட முழுமுடக்கத்தால் தங்கள் இல்லத்தில் இருந்துக் கொண்டு சுயத் தொழில் புரிந்து வாழ்ந்து வந்த பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட நிலையில் நிலைகுலைந்து தவித்து வருகின்றன. 

அது நாள்வரை அவர்கள் உழைத்துச் சேர்த்து வைத்த சேமிப்புகள் யாவும் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்காக செலவாகிவிட்ட நிலையில் மேற்கொண்டு கடன் வாங்கி வாங்கி மீள் முடியாத அளவிற்கு வட்டிக் கடன் சிக்கலில் மூழ்கியுள்ளனர். 

மீண்டும் தொழிலுக்கு உயிரூட்டித் தொடர முதலீடு இல்லாத நிலையில் வருவாய்க்கு வழியின்றி பரிதவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே பெற்ற கடன்களுக்கு வட்டிக் கூட கட்ட முடியாமல் திணறிக் கொண்டு இருக்கின்ற அவர்களை வாங்கிய கடன்களுக்கு வட்டிக் கேட்டு நிதி நிறுவன ஊழியர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு கடும் அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர். 

"சோறு திங்கிறியே அதற்கு எங்கிருந்து பணம் வருகிறது", "கடனுக்கு வட்டி கட்ட முடியலைனா ஏன் உயிரோடு இருக்கிற" என்றெல்லாம் பேசி நோகடித்து வருகின்றனர். 

இப்படிப்பட்ட வட்டி கேட்டு ஏசும்  அழைப்புகளால் மனம் நொந்து பலரும் தற்கொலைக்கு தள்ளப்படும் அவலம் அன்றாடச் செய்தியாகிவிட்டது. 

இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொள்ள கடன் செயலிகள் (loan apps) பல்கிப் பெருகி வருகின்றன. இவைகள் கடனைக் கொடுத்துவிட்டு வட்டிக் கட்ட முடியாமல் போனால் "உங்கள் படத்தை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு மானத்தை வாங்குவோம்" என்று மிரட்டுகின்றனர். இதை தொலைக்காட்சி ஒன்று பாதிக்கப்பட்டவர்களிடம் பேட்டி எடுத்து செய்தியாகவே வெளியிடப்பட்டது. 

அவமானத்திற்கு அச்சப்பட்டு மருகி நிற்கும் நிலையில் மற்றொரு கடன் செயலியில் இருந்து அழைத்து உடனடியாக கடன் தருகிறோம் என்று சொல்ல அந்தக் கடன் வலையிலும் சிக்கிவிடுகிறார்கள்.

இவ்வாறு சிக்கும் சிலர் குறுக்கு வழியில் பணம் சேர்க்க ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுடுகின்றனர். அது மீள் முடியாத சிக்கலில் ஆழ்த்தி விடுகிறது. 

இப்படியான கடன் - வட்டி சிக்கலில் மாட்டிக் கொண்டு மீள் வழியின்றி பரிதவிப்போரை மீட்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளதல்லவா? 

பெற்ற கடன்களுக்கு வட்டிக் கட்ட முடியாதோரைக் காக்க கொரோனா காலத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு கடன் வசூலை நிறுத்தி வைக்க ஆணையிட்டதே. 

ஆனால் தனி மனிதர்களை, குடும்பங்களை மீட்க அப்படியான நடவடிக்கை இப்போது தேவைப்படுகிறதே...அரசு தலையிட வேண்டுமல்லவா? 

ரூபாய் 50 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு வட்டித் தள்ளுபடி செய்யலாமே? 

துயர் மீட்பு நிதி (distress fund) என்ற ஒன்றை உருவாக்கி அதணை முதலமைச்சர் நிவாரண நிதியோடு இணைத்து பொது மக்களிடம் இருந்து நிதியைப் பெற்று கடன் வலையில் சிக்கியோரின் கடன்களை அடைத்து அவர்களுக்கு மீட்சியைத் தரலாமே? 

தமிழக மக்கள் நலம் நாடி ஆட்சி நடத்தும் தமிழக  முதல்வர் ஆதரவுக் கரம் நீட்டுவார் என்று எதிர்பார்ப்போம்.