கவர் ஸ்டோரி

துணை முதலமைச்சரானார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார்...!

Tamil Selvi Selvakumar

29 ஆதரவு எம்எல்ஏக்களுடன் சிவசேனா - பாஜக கூட்டணியுடன் கைகோர்த்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜீத் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சராக பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மகாராஷ்டிர எதிர்கட்சித் தலைவராக இருந்த அஜீத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சி இருந்து விலகி தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் திடீரென இணைந்தார். 

யாரும் எதிர்பாராத நிலையில் ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 30 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் ரமேஷ் பைஸ் இடம் அஜீத் பவார் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தின் 2-வது துணை முதலமைச்சராக அஜீத் பவார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ரமேஷ் பைஸ், பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

பின்னர், அஜீத் பவாரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான அனில் பட்டேல், அதிதி தாக்ரே, சகன் புஜ்பால், தனஞ்செய் முண்டே உள்ளிட்ட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். முன்னதாக, 2019-ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் உடன் இணைந்து அஜீத் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்ற போது, தேசிய வாத காங்கரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து 8 மணி நேரத்தில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதேபோல், உத்தவ் தாக்ரே தலைமையிலான கூட்டணி ஆட்சியிலும் அஜீத் பவார் துணை முதலமைச்சராக பதவி வகித்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜக கூட்டணியில் இணைந்திருப்பது மராட்டிய அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.