கவர் ஸ்டோரி

ஆளுநர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை - செல்வபெருந்தகை!

Tamil Selvi Selvakumar

இந்திய குடியரசு தினத்தையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்கள் நாளை அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கிறது.

தேநீர் விருந்து புறகணிப்பு :

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒருமனதாக இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவை வேண்டுமென்றே காலதாமதம் செய்து அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கும், நீட் விலக்கு, பல்கலைக்கழக சட்டங்கள் மேலும் தமிழ்நாடு மக்கள் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. 

தொடர் சர்ச்சையில் ஈடுபடும் ஆளுநர் :

கடந்த 23.01.2023 அன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளின் போது இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றி எழுதவேண்டுமென பேசியிருக்கிறார். இவர் ஆர்.எஸ்.எஸ். முகமாகவே செயல்பட்டு வருகிறார். தமிழகம், தமிழ்நாடு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று நினைத்திருந்த வேளையில் மீண்டும் சர்ச்சை பேச்சுகள் பேசி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை செயல்படவிடாமால் தடுக்கிறார்.  

பாஜகவின் கைப்பாவை :

ஆர்எஸ்எஸ் கொள்கைளை திணிப்பதில் முழு மூச்சாக செயல்படும் இவர் திருந்துவதற்கு வாய்ப்பேதுமில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட  நினைக்கும் பாசிச பாஜக மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரின் செயலுக்கு வன்மையாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களிலாவது ஆளுரின் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டுமென்று தனது அறிக்கையில் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.