உலகின் அறியப்படாத ரகசியங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதுதான் பெர்முடா முக்கோணக் கடல் பகுதி. இந்த பகுதிக்குச் சென்ற பல கப்பல்கள், விமானங்கள் மர்மமான முறையில் காணாமல் போனதால் டெவில்ஸ் முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது.
கப்பல்களும் விமானங்களும் காணாமல் போனதற்கு பின்னால் உள்ள காரணம் இதுவரை விளக்கப்படாமலேயே உள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இன்றைய காலத்திலும், மோசமான வானிலை, மனிதத் தவறு, இயற்கைக்கு அப்பாற்பட்ட காரணம், வேற்று கிரகவாசிகள் என்று பல கதைகள்தான் வெளியில் சொல்லப்படுகிறது.
சுருக்கமாகச் சொன்னால் உலகின் மிகப் பெரிய அச்சங்களில் ஒன்றாக பெர்முடா முக்கோணம் இருந்து வருகிறது. இந்தநிலையில்தான் ஏன்சியன்ட் மிஸ்டரீஸ் குரூஸ் என்ற பயண நிறுவனம் தனது இணையதளத்தில் ஒரு விளம்பரம் செய்துள்ளது. அதில் பெர்முடா சுற்றுப் பயணத்தில் காணாமல் போவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் நீங்கள் காணாமல் போனால் உங்கள் பணம் திரும்பத் தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நியூயார்க்கில் இருந்து பெர்முடா செல்லும் நார்வே பிரைமா லைனரில் பயணிகள் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் பயணிகள் பெர்முடா முக்கோண பயணத்தை கப்பலின் அடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடித் தளம் வழியாகப் பார்த்து சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த விசித்திர சலுகைக்காக பயணிகள் கட்டணம் ஆயிரத்து 450 பவுண்டுகள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்த் திரைப்படம் ஒன்றில் நடுக்கடலில் கப்பலில் பழுது ஏற்பட்டால் இறங்கித் தள்ள வேண்டியதுதான் வேலை என்று நடிகர் செந்தில் கூறுவதற்கு, அப்போ என் சம்பளத்தை யார் வாங்குவார்கள் என்று கவுண்டமணி கேள்வி கேட்டு அடிப்பார். கப்பல் நிறுவனத்தின் விளம்பரமும் அப்படித்தான் உள்ளது. ஆனால், யாரும் கேள்வி கேட்பார்களா அல்லது பணத்தை கட்டி பயணிப்பார்களா என்பது எதிர் வரும் நாட்களில்தான் தெரியும்....