கவர் ஸ்டோரி

ஈபிஎஸ் வீட்டுக்கு தடபுடலாக வந்த சீர்வரிசை...மாஸ் காட்டிய விஜயபாஸ்கர்...!

Tamil Selvi Selvakumar

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவிக்க, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்  மேள தாளங்கள் முழங்க, சீர்வரிசையுடன் சேலத்திற்கு சென்றார்.  

கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டது. அதுவரை இரட்டை துப்பாக்கிகளாக செயல்பட்டு வந்த ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஒற்றை தலைமை விவகாரத்தில் இரண்டு அணிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் மாறி மாறி பதவி நீக்கம் செய்துக்கொண்டு மோதி கொண்டனர்.

பின்னர் இது தொடர்பாக ஈபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் மோதி வருகின்றனர். அதன்படி, சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பிற்கு பிறகு, எந்தவித போட்டியும் இன்றி அதிமுக பொதுச்செயலாளராக  எடப்பாடி பழனிசாமி தேர்வானார். 

தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்றதை அதிமுகவினர் விழா நடத்தி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாரளாக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 350 கார்கள் மூலமாக 50 வகையான தடபுடலான சீர்வரிசைகளுடன் சென்று தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். 

மா,பலா,வாழை, கரும்பு, தர்பூசணி, தேங்காய் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களை சீர்வரிசை தட்டுகளில் வைத்து பிரம்மாண்டமான முறையில் மங்கள் வாத்தியத்துடன் பட்டாசுகளை வெடிக்கவிட்டு ஊர்வலமாக எடுத்து வந்து ஈபிஎஸ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சீர்வரிசையில் கன்றுடன் பசுமாடு, ஆடு மற்றும் கோழிகளும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்றதை குடும்ப விழாவை போன்று கொண்டாடி அசத்திய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.