கவர் ஸ்டோரி

நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவரானார் ஜக்தீப் தன்கர்...!

Tamil Selvi Selvakumar

நாட்டின் 14வது குடியரசு துணை தலைவராக, மேற்குவங்கத்தின் முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தன்கர் பதவி ஏற்றுக்கொண்டார். 

குடியரசு துணை தலைவரை தேர்தெடுக்கும் தேர்தல்:

இந்தியாவின் 13வது குடியரசு துணை தலைவராக இருந்த  வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து, புதிய குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த ஆகஸ்ட்  6 ஆம் தேதி  நடைபெற்றது. இந்த தேர்தலில், எதிர்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெக்தீப் தன்கர் இருவரும் போட்டியிட்டனர்.

வெற்றி  யாருக்கு:

புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி  காலை 10 மணி அளவில் தொடங்கி மாலைம்5 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதன்பின் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவியது. இந்நிலையில், குடியரசு துணை தலைவர் தேர்தலில், எதிர்கட்சிகளின் கூட்டணி வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வாவை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெக்தீப் தன்கர், 346 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். 

வேற்றி வேட்பாளர் பதவியேற்பு:

கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஜெக்தீப் தன்கர், நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக இன்று பதவி பதவியேற்றுக்கொண்டார். இது தொடர்பான நிகழ்ச்சி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிலையில், இதில் பிரதமர் மோடி, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 

பதவி பிரமாணம் செய்து வைத்த குடியரசு தலைவர்:

நாட்டின் 14 வது குடியரசு துணை தலைவராக இன்று பதவியேற்று கொண்ட ஜெக்தீப் தன்கருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முறைப்படி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணித்தபோதும், பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு, தன்கருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.