கவர் ஸ்டோரி

PSBB பள்ளியைக் காப்பாற்ற ஒரு மாநில அரசாங்கத்தையே மிரட்டிப் பார்க்கிறான் என்றால்... கொதிக்கும் ஜேம்ஸ் வசந்தன்

பிஞ்சுப் பெண்குழந்தைகளுக்கு ஒரு அவலம் நேர்ந்திருக்கிறது.. அதைக்குறித்து  அக்கறை கொள்ளாமல், அந்தப் பள்ளியைக் காப்பாற்ற ஒரு மாநில அரசாங்கத்தையே மிரட்டிப் பார்க்கிறான் என தமிழக அரசை கலைப்பதாக எச்சரிக்கை விட்ட சுப்ரமணிய சுவாமிக்கு இசையமைப்பாளர் ஆவேசமாக கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தையே அதிரவைத்துள்ளது சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார். மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது, மாணவிகளை தவறான நோக்கத்தில் அணுகியது உள்ளிட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான அந்தப் பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில், அந்த பள்ளிக்கு ஆதரவாக பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தமிழக அரசை எச்சரித்துள்ளார்.

சென்னை, கே.கே. நகரில் இயங்கி வரும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில்,  ஆசிரியராக பணியாற்றிய ராஜகோபாலன் மீது, பாலியல் புகார் எழுந்துள்ளது. குற்றச்சாட்டு குறித்து, தீவிர விசாரணை நடத்துவதில் தவறில்லை. என்னைப் பொறுத்தவரை விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும். அதில் துளி அளவு சந்தேகம் ஏற்பட்டாலும், தமிழகத்தில் விசாரணை நடக்கவிடாமல் செய்துவிடுவேன். அதற்கான சட்ட நுணுக்கங்கள் எனக்குத் தெரியும். இந்த விஷயத்தில் உள்நோக்கம் கொண்டு பள்ளி நிர்வாகத்தை நசுக்க அரசு நினைத்தால், ஆட்சியைக் கலைப்பதை தவிர, வேறு வழியில்லை என உதார் விட்டிருந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக கண்டனக் குரல்கள் வலுத்து வருகிறது. 

இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில்... "என்ன நடக்கிறது இந்த நாட்டில்.. எவனெவனோ மிரட்டுகிறான் ஒரு மாதம் கூட ஆகாத மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு மாநில அரசை! கல்வி கற்க பயமின்றிச் சென்றுவரவேண்டிய பள்ளியில் சில பிஞ்சுப் பெண்குழந்தைகளுக்கு ஒரு அவலம் நேர்ந்திருக்கிறது.. அதைக்குறித்து  அக்கறை கொள்ளாமல், அந்தப் பள்ளியைக் காப்பாற்ற ஒரு மாநில அரசாங்கத்தையே மிரட்டிப் பார்க்கிறான் என்றால், எப்படிப்பட்டவர்களிடம் இந்த உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசம் சிக்கியிருக்கிறது என்று விளங்குகிறதா!" என பதிவிட்டுள்ளார்.