கவர் ஸ்டோரி

கள்ளக்குறிச்சி வழக்கில் புதிய திருப்பம்... 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்!

Tamil Selvi Selvakumar

கனியாமூர் பள்ளி மாணவியின் மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர், செயலாளர் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவி உயிரிழப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து மர்மமான முறையில் உயிரிழந்தார். 

கலவரம்:

கடந்த ஜூலை 13 ஆம் தேதி மாணவி உயிரிழந்ததையடுத்து, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். தொடர்ந்து, அமைதியான வழியில் போராட்டத்தை நடத்தினர். ஜுலை 13 முதல் 16 வரை அமைதியான முறையில் நடந்த போராட்டம் ஜூலை 17 ஆம் தேதி மிகப்பெரிய கலவரமாக வெடித்தது.

சூறையாடப்பட்ட பள்ளி:

இந்த கலவரத்தில் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. அத்துடன் பள்ளியில் இருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

நீதிமன்றம்:

மாணவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மாணவியின் உடலை வைத்து விளையாட வேண்டாம் என பெற்றோரையும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கடுமையாக சாடினர். 

2-வது முறையாக பிரேத பரிசோதனை: 

மாணவியின் உடல் இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

பள்ளி நிர்வாகிகள் கைது: 

தொடர்ந்து, மாணவி இறப்பு தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் மற்றும் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகிய இரு ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜாமீன் தொடர்பான வழக்கு:

இந்நிலையில், 5 பேரின் ஜாமீன் தொடர்பான மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இளந்திரையன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெற்றோரின் சந்தேகத்தின்படி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா? என காவல்துறையிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பினர், இரு பிரேதப் பரிசோதனை அறிக்கையும் ஆய்வு செய்யப்பட வேண்டுமென தெரிவித்தனர்.

நீதிபதி உத்தரவு:

இதையடுத்து ஜாமீன் தொடரபான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஐவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிப்பதாகவும் நீதிபதி இளந்திரையன் அறிவித்தார்.