கவர் ஸ்டோரி

சர்தார் 2 படப்பிடிப்பில் விபத்து... சண்டைப்பயிற்சியாளர் தவறி விழுந்து பலி...

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் சண்டைப்பயிற்சியாளர் தவறி விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடந்தது என்ன? எனபது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

மாலை முரசு செய்தி குழு

இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். இவரது இயக்கத்தில் கார்த்தி, ராஷி கன்னா, லைலா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு தீபாவளியன்று வெளியானது சர்தார்.

கார்த்தியின் திரை வரலாற்றில் மற்றுமொரு மைல் கல்லாக விளங்கிய சர்தார் திரைப்படம் ரசிகர்களை மிரட்சியடையச் செய்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி சமீபத்தில் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கும் சர்தார் 2 திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாக ஜூலை 16-ம் தேதியன்று அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பில் நடந்த அசம்பாவித சம்பவம் ஒன்று கோலிவுட்டை அதிர வைத்துள்ளது. சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ள பிரசாத் லேபில் சர்தார் 2 படத்திற்கான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.

இதில் சண்டைப் பயிற்சியாளரான ஏழுமலை என்பவர், 20 அடி உயரத்தில் இருந்து பயிற்சி மேற்கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்த ஏழுமலை மயக்கமடைந்தார்.

உடனே காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததைத் தொடர்ந்து, அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏழுமலை இறந்து விட்டதாக கூறினர்.

உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கீழே விழுந்த ஏழுமலைக்கு மார்பு பகுதியில் பலத்த அடிபட்டு நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின்போதும், கிரேன் அறுந்து விழுந்து உதவி இயக்குநர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இந்நிலையில் சர்தார் 2 படப்பிடிப்பிலும் நடந்த இந்த அசம்பாவிதம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.