கவர் ஸ்டோரி

மதுரை நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் மு.க.அழகிரி?

Tamil Selvi Selvakumar

மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர்  மு.க. அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த பிரபல பாடகர் டி.எம்.செளந்தரராஜனுக்கு சிலை நிறுவப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், அதற்கான பணிகள் கடந்த 6 மாதமாக நடைபெற்ற நிலையில் மதுரை காமராஜபுரத்தில் இன்று சிலை திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருமலை நாயக்கர் மகால் சுற்றுவட்டாரத்தில் டி.எம்.எஸ் -ஸின் சமூக மக்கள் அதிகம் வசிப்பதாலும், அவர் பிறந்து வளர்ந்த பகுதி என்பதாலும் அங்கு சிலை நிறுவப்படுகிறது. இந்நிலையில் டி.எம்.எஸ் குரலுக்கு மிகத்தீவிர ரசிகர் மு.க.அழகிரி என்பது அனைவரும் அறிந்ததே.

2008 ல் மதுரையில் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் பாடகர் டி.எம்.எஸ் க்கு மு.க.அழகிரி பாராட்டு விழா

நடத்தினார். 2010 ல் தனது மகன் துரை தயாநிதி திருமணத்தில் டி.எம்.எஸ் பாடிய ’பெண் ஒன்று கண்டேன் முகம் பார்க்கவில்லை’ என்ற பாடலை மேடையில் பாடி அசத்தினார் மு.க. அழகிரி. மேலும் இன்று நடைபெறும் நிகழ்ச்சிக்கு அவருக்கு மேல்மட்டத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் மதுரையில் தனது பெரியப்பா மு.க.அழகிரியை சந்தித்ததும், சமீபத்தில் தயாளும்மாள் பிறந்த தினத்தில் கோபாலபுர இல்லத்தில் மு.க.ஸ்டாலினும் மு.க.அழகிரியும் சந்தித்து பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் 2024 ல் மதுரை மக்களவை தொகுதி  அவரது மகனான துரை தயாநிதிக்கு வழங்கப்படவுள்ளதாகவும் ஏற்கனவே பேச்சு அடிபடுகிறது.

இந்நிலையில் நித்தம் நித்தம் திமுகவினர் ஏதாவது பிரச்சனைகளை கொண்டு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,கம்பேக் அழகிரி கொடுத்தால் மட்டுமே முதலமைச்சருக்கு பாதி தலைவலி குறையும் என உ.பிக்கள் பலர் கருத்தும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மதுரை நிகழ்ச்சியில் அழகிரி கலந்து கொள்ளாவிட்டாலும் முதலமைச்சர் அண்ணன் மு.க.அழகிரி வீட்டிற்கு செல்வார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

- மா.நிருபன் சக்கரவர்த்தி