கவர் ஸ்டோரி

"மனமே நீ துடிக்காதே, விழியே நீ நனையாதே" பார்ப்போர் கண்களை குளமாக்கும்... ஒரு பார்வையற்றவரின் அனுபவம்!

Malaimurasu Seithigal TV

பார்வையற்ற ஒருவர் இளையராஜா இசையோடு தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட அனுபவம் பார்ப்பவர்கள் நெஞ்சை நெகிழச்செய்துள்ளது.

இளையராஜாவிற்கு 80 வயது நிறைவடைந்ததை ஒட்டி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இளையராஜா ரசிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் விதமாக இளையராஜா 80 சீனியர் ரசிகர்கள் மற்றும் ஜூனியர் ரசிகர்கள் எனும் தலைப்பில் நீயா நானா விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் இசைஞானி இளையராஜா ரசிகர்கள் கலந்துகொண்டு அவரது இசையோடு தாங்கள் கொண்டிருந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பார்வையற்ற நபர் ஒருவர் பேசும் பொழுது, எனக்கு பிறவியிலிருந்து பார்வை இல்லை. ஆனால் சிறிதளவு வெளிச்சம் மட்டும் தெரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நின்று போய்விட்டது. அந்த வெளிச்சத்தை மீட்டெடுக்க முயற்சி செய்து பார்கலாமே என்று நிறைய மருத்துவர்களை அனுகினேன். அப்பொழுது என்னுடைய கண்ணை எடுத்து வேறு யாருக்கு வைத்தாலும் அந்த நபருக்கு கண் தெரியும், ஆனால் வேறு யாருடைய கண்ணை எடுத்து எனக்கு வைத்தாலும் எனக்கு கண் தெரியாது என மருத்துவர்கள் எனது பெற்றோர்களிடம் கூறினர். அந்த சம்பவத்தை கடந்து வரும் பொழுது வானொலி பெட்டியில் ஒரு பாடல் இசைத்துக்கொண்டிருந்தது என கூறினார்.

தொடர்ந்து, அந்த பாடலை அவர் பாடிக்காட்டினார். வாழ்க்கை திரைப்படத்தில் இளையாராஜா இசையமைத்து பாடிய பாடலான மனமே துடிக்காதே, விழியே நனையாதே... வாழ்க்கை பாதையில் மேடு பள்ளங்கள் வரலாம் ஆனால் வாழ்வே வாடிப்போகுமா மனமே துடிக்காதே, விழியே நனையாதே என அவரின் கனத்த குரலில் பாடும்பொழுது அரங்கில் இருந்தவர்களின் கண்கள் நனையத் தொடங்கின. அந்த பாடலை கேட்டபோது அவருக்கு தோன்றிய உணர்வுகளாக "எல்லா பிரச்சனைகளும் வந்துவிட்டு போகலாம் ஆனால் வாழ்க்கையை வாழலாம் இல்லையா" என முதுகை தட்டிக்கொடுத்தது போல உணர்ந்ததாக அவர் கூறிய போது அரங்கம் கைத்தட்டல்களால் நிறைந்திருந்தது.