கவர் ஸ்டோரி

புதிய சென்சார் கருவிகள் அறிமுகம்...இனி போக்குவரத்து நெரிசலே இருக்காது...!

Tamil Selvi Selvakumar

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுவதால், அதனை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருப்பதுபோல் நவீன தொலைத்தூர கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் போக்குவரத்து:

சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், போக்குவரத்து நெரிசலும் அதற்கேற்ப அதிகரித்து வருகிறது. அதுவும் “பீக் அவர்ஸ்” எனப்படும் காலை, மாலையில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை தொடர்கதையாக உள்ளது. 

போக்குவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிரம்:

இதனிடையே சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போக்குவரத்து போலீஸாரும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளனர். எடுத்துக்காட்டாக, நெரிசலை குறைக்க அண்ணா சாலை உட்பட பல்வேறுசாலைகளில் சில பகுதிகளை ஒருவழிப் பாதையாக போக்குவரத்து போலீஸார் மாற்றம் செய்துவருகின்றனர். ஆனாலும், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. அதேபோல், “கூகுள் மேப்” மூலமும் நெரிசலை கண்காணித்து, அப்பகுதிகளுக்கு போக்குவரத்து போலீசார் உடனடியாக சென்று போக்குவரத்து நெரிசலை சரிசெய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, தொழில் நுட்ப உதவியுடன் நெரிசலை கட்டுப்படுத்தும் முயற்சியிலும் போக்குவரத்து போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

சாலை சிக்னல்களில் நவீன தொலைத்தூர கட்டுப்பாட்டு கருவிகள்:

அந்த வகையில், வெளிநாடுகளில் இருப்பதுபோல, சென்னையில் உள்ள 312 சாலை சிக்னல்களில் நவீன தொலைத்தூர கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  நெரிசலை கட்டுப்படுத்தவும், வாகனங்கள் தங்கு தடையின்றி விரைந்து செல்லவும், மருத்துவ அவசர ஊர்திகள், விஐபிக்களின் வாகனங்கள், பிற அவசரகால வாகனங்களின் இயக்கத்தின்போதும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களிலும் போக்குவரத்தின் அளவை பொருத்து இக்கருவியானது இயங்கும் என்று அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர்:

இதுகுறித்து பேசிய சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர், இந்த நவீன தொலைதூர கட்டுப்பாட்டு கருவிகள் சாலையில் நெரிசலை கட்டுப்படுத்தும் எனவும், சாலையில் ஒருபுறம் நெரிசல், மறுபுறம் குறைந்த நெரிசல் அல்லது வெறிச்சோடி காணப்பட்டால், இந்த கருவி தானாகவே இயங்கி பச்சை அல்லது சிவப்பு சிக்னல் நேரத்தை கட்டுப்படுத்தும் எனவும், இதற்கு போக்குவரத்து போலீஸாரின் உதவி, வழிகாட்டுதல் தேவை இல்லை. இந்த கருவி மூலம் வாகனங்கள் தேங்காமல் சீராக செல்லும் என்றும், தற்போது இந்தக் கருவியை நிறுவ டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.