கவர் ஸ்டோரி

தேவர் தங்கக் கவசம்...அதிகாரப்போட்டியில் ஈபிஎஸ், ஓபிஎஸ்...ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

Tamil Selvi Selvakumar

பசும்பொன் தேவர் சிலைக்கு  சாத்தப்படும் தேவர் கவசத்தை வருவாய்த்துறை வசம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அதிகாரம் யாருக்கு :

முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை நிகழ்வையொட்டி, பசும்பொன்னில் அமைந்திருக்கும் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் அணிவிக்கப்படும் தங்க கவசத்தை வங்கியிடம் பெற்று விழா கமிட்டியிடம் ஒப்படைக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்புகள் மோதி வருகின்றன. ஜெயலலிதாவால் அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்கக் கவசத்தை தங்கள் தரப்பிடம் ஒப்படைக்கக் கோரி இரு தரப்பினரும் வங்கியில் கடிதம் அளித்துள்ளனர். இதனால், வங்கி நிர்வாகம் எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறி வந்தது.

வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்:

இதனைத்தொடர்ந்து, தேவர் குருபூசை அன்று பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு சாத்தப்படும் தங்க கவசத்தை கேட்டு மதுரையில் உள்ள வங்கியிடம் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் மனு வழங்கப்பட்டது. மேலும் தங்க கவசத்தை தன்னிடம் ஓப்படைக்க்க கோரி ஈபிஎஸ் ஆதரவாளரான திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவானது நீதிபதி பவானி சுப்புராயன் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் தங்கள் பக்க வாதங்களை எடுத்து வைத்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தார்.

அதிகார போட்டி:

இந்நிலையில், இன்று மதுரை ஐகோர்ட் கிளையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில் தீர்ப்பு 4 மணிக்கு ஒத்துவைக்கப்பட்டது. இதனால் தேவர் தங்கக் கவசம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கா? ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கா? அல்லது 2017 போல மாவட்ட ஆட்சியர்கள் வசம் ஒப்படைக்கப்படுமா என்பது குறித்து அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

இப்படி தொடர் சர்ச்சைக்கு இடையில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தேவருக்கு சாத்தப்படும் தங்க கவசத்தை ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறையிடம் ஒப்படைக்குமாறு வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதற்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேவர் தங்கக் கவசம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கா? ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கா? என்ற அதிகாரப் போட்டிக்கு இடையில் நீதிமன்றத்தின் தீர்ப்பானது ஓபிஎஸ் ஈபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.