இன்றைய காலத்தில் முக்கிய நகரங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையின் மூன்றாவது கண் என அழைக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்தியவர்தான் முன்னாள் சென்னை கமிஷனரான ஏகே.விஸ்வநாதன். 2017-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி முதல் 2020 ஜூலை 1-ம் தேதி வரை சென்னை மாநகர கமிஷனராக பணியாற்றினார்.
1990-ம் ஆண்டு யூ.பி.எஸ்.சி தேர்வில் தமிழக கேடரில் ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வான ஏ.கே.விஸ்வநாதன், தர்மபுரி மாவட்டத்தின் ஏ.எஸ்.பி.யாக பணியை தொடங்கினார்.
இதையடுத்து எஸ்.பி-யாக பதவி உயர்வு பெற்று மதுரை மாவட்ட சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராகவும், மாவட்ட எஸ்.பி.யாகவும் பணியாற்றினார். 1998-ல் மாநில சிறப்பு பிரிவு எஸ்.பி.யானவர், பின்னர் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையிலும் சிறிது காலம் பணியாற்றினார்.
சி.பி.ஐ.யிலும் சேவையாற்றியவர், ஐஜியாக பதவி உயர்வு பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை இணை ஆணையர் மறும் சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராகவும் இருந்தார்.
பின்னர் 2015-ம் ஆண்டு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று மெட்ரோ போக்குவரத்து கழகத்தின் விஜிலென்ஸ் அதிகாரியாகவும், தமிழ்நாடு ஊர்க்காவல்படை ஏ.டி.ஜி.பி-யாகவும் பணியாற்றினார். அதன் பின்னரே, 2017-ம் ஆண்டு சென்னை கமிஷனராக உயரிய பொறுப்பை பெற்றார்.
ஏ.கே.விஸ்வநாதன் சென்னை கமிஷனராக பணியாற்றிய காலத்தை பொற்காலம் என கூறுகின்றனர் காவல்துறையினர். காவல்துறை உங்கள் நண்பன் என்பதை நடைமுறையில் நிரூபித்துக் காட்டினார் என காவலர்கள் பெருமை பொங்க கூறுகின்றனர்.
மூன்றாவது கண் என்ற திட்டத்தை சென்னை முழுவதும் செயல்படுத்தி, முக்கியப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ஏற்பாடு செய்தார். கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாகலாம் என அசாத்திய துணிச்சல் கொண்ட குற்றவாளிகள் சிசிடிவி துணையுடன் கைதானதற்கு ஏ.கே.விஸ்வநாதனின் முயற்சியே முக்கிய காரணமாகும்.
கொரோனா காலகட்டத்தில் புதிய செயலிகள், ட்ரோன்கள், காவலர்களுக்கான முகக்கவசங்களை காவலர்களே தயாரிப்பது, ஐ.பி.எஸ். முதல் காவல்துறையின் கடைநிலை ஊழியர் வரை கொரோனா ஊரடங்கின்போது, மனம் தளராமல் சேவையாற்றியவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தார்.
சென்னை கமிஷனராக இருந்தபோது, பிரபல ரவுடிகள் இரண்டு பேர் சுட்டுக் கொன்ற அதே வேளையில், பொதுமக்களை அடிப்பதோ, துன்புறுத்தவோத கூடாது என காவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனாலேயே தங்கள் இதயத்திற்கு நெருக்கமான நபராக ஏகே விஸ்வநாதன் விளங்குகிறார் என காவலர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.
சிஏஏ போராட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் நடந்த முக்கியப் போராட்டங்களின்போது நிலைமையை கட்டுக்குள் வைத்ததுடன், பொதுமக்களின் பாதுகாப்புக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கினார். கருணாநிதி மறைவின்போது ராஜாஜி அரங்கில் திடீர் நெரிசல் ஏற்பட்டது. அப்போது, காவலர்களை களமிறக்கி, நிலைமையை ஒரு மணி நேரத்தில் கட்டுக்குள் கொண்டு வந்த பெருமை இவரையேச் சாரும்.
தமிழக காவல்துறையில் 34 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன், ஜூலை 31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். அவருக்கு காவல்துறையினர், தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.