கவர் ஸ்டோரி

புதிய ஒருங்கிணைந்த விமான முனையக் கட்டிடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...!

Tamil Selvi Selvakumar

பல்வேறு திட்டப்பணிகளை திறந்து வைப்பதற்காக சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விமான முனையத்தை திறந்து வைத்தார்.

சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனையம், சென்னை கோவை இடையே 'வந்தே பாரத்' ரயில் சேவை உள்ளிட்ட  பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை புரிந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி தலைநகர் சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  இந்நிலையில் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வருகை புரிந்த பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி கைக்கூப்பி வரவேற்றார். அதன்பின் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்தும், 'Gandhi's Travel In TamilNadu' என்ற புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கியும் வரவேற்றார்.

இதனைத்தொடர்ந்து, சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை வரவேற்பதற்காக தமிழக அமைச்சர்கள், திமுக எம்பி கனிமொழி, பாஜக முக்கிய நிர்வாகிகள், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை விமான நிலையத்திலிருந்து, காரின் மூலம் சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனையத்திற்கு சென்ற பிரதமர் மோடி, முதலில் புதிய ஒருங்கிணைந்த கட்டிடத்தை பார்வையிட்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி கை குலுக்கவே, முதலமைச்சர் நகைப்பால் மலர்ந்தார்.

இதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை பிரதமர் மோடி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சென்னை - கோவை இடையேயான ’வந்தே பாரத் ரயில்’ சேவையை தொடங்கி வைப்பதற்காக தனி ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ என் எஸ் கடற்படை தளத்திற்கு புறப்பட்டார்.