கவர் ஸ்டோரி

பொள்ளாச்சி பாலியல் வழக்கை கையிலெடுக்கும் ஸ்டாலின்.! சிக்குவார்களா முக்கிய தலைகள்.? 

Malaimurasu Seithigal TV

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது அதிமுக அரசின் மீது பல குற்றச்சாட்டுகளை எழுப்பியது. அதோடு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதே கூறியது. அதைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கும் வந்தது. ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதனால், எதிர்க்கட்சியாக இருக்கும் போது விமர்சிக்க வேண்டியது, ஆட்சிக்கு வந்ததும் அமைதியாக இருக்க வேண்டியது என்று திமுக மீது விமர்சனங்கள் எழுந்தது. இந்த விமர்சனங்கள் முதல்வரின் கவனத்திற்கும் எட்டியுள்ள நிலையில் கொரோனா முடிந்த இந்த சூழலில் முக்கிய வழக்குகளை தூசி தட்ட முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தலைமை செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஆட்சி வந்ததும் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை பற்றிய தகவல்களை திரட்டச்சொன்ன முதல்வர் ஸ்டாலின், தற்போது தமிழகத்தையே அதிரவைத்த இரண்டு முக்கிய வழக்குகளை கையிலெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று தான் பொள்ளாச்சி பாலியல் வழக்கு.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில்  பெரும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பெயர்கள் அடிபட்டன. இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரணை செய்து வந்தாலும் கடந்த ஆட்சியில் இவர்களுக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் திரட்டப்படாத காரணத்தால், இவர்கள் மீதான குண்டர் சட்டம் நீக்கப்பட்டது. எனவே தற்போது இந்த வழக்கில் முக்கிய இதில் முக்கியமான சில ஆதாரங்களை அரசு தரப்பு திரட்டி வருகிறதாக சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் இந்த வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

இந்த வழக்கிற்கு ஈடாக பரபரப்பாக பேசப்பட்டது கொடநாடு கொலை வழக்கு சம்பவம். கடந்த 2017ல் கொட நாட்டு பங்களாவில்  பெரிய கொள்ளை சம்பவம் ஒன்று நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதைத் தாண்டி இந்த எஸ்டேட்டில் அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார்.

இந்த கொள்ளை சம்பவத்தில் சயான், மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் சயான், மனோஜ், கனகராஜ் ஆகிய மூன்று பேரும் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட இதில் கனகராஜ் விபத்தில் பலியாகிவிட்ட நிலையில் சயான், மனோஜ் தற்போது பெயிலில் வெளியே வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் மீது விசாரணையை இருக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாகவும், அதோடு சில முக்கிய ஆதாரங்களை திரட்டவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த இரண்டு வழக்கையும் தமிழக அரசு முக்கியத்துவப்படுத்த காரணமே இதில் அதிமுக தலைவர்கள் சிக்க இருப்பதால் தான் என்று சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே சில அதிமுக தலைகள் பெயர்கள் அடிபட்ட நிலையில் அவர்கள் மீது ஆதாரங்களை திரட்டி, உள்ளே தள்ளவும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.