கவர் ஸ்டோரி

இளைஞர்கள், பெண்கள், ஆதிவாசிகள் வழிநடத்துவதன் மூலம் உருவாகும் புதிய பாரதத்தை யாராலும் தடுக்க முடியாது - மோடி!

Tamil Selvi Selvakumar

ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரும், ஆர்.ஆர்.ஆர் படத்தின் உண்மை நாயகனுமான அல்லுரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, புதிய பாரதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்று உரையாற்றியுள்ளார்.

ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த  சுதந்திரப் போராட்ட வீரரும், ஆர்.ஆர்.ஆர் படத்தின் உண்மை நாயகனும் ஆன அல்லுரி சீதாராம ராஜூவின் 125 வது பிறந்த நாள் தினத்தையொட்டி, பீமாவரத்தில் விழா நடைபெற்றது. மேலும் அவருக்கென்று  30 அடி உயரம் கொண்ட வெண்கல சிலையும் அமைக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து  ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆளுநர் பிஸ்வ பூசன் ஹரிசந்தன் முன்னிலையில், விழாவை தொடங்கி வைத்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி, அல்லுரி சீதாராம ராஜூவின் 30 அடி உயரம் கொண்ட வெண்கல சிலையையும் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், அல்லுரி சீதாராம ராஜுவின் அடையாளமான வில் அம்பு மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,  நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தன்னை ஆரம்பத்திலேயே ஈடுபடுத்திக்கொண்ட அல்லுரி சீதாராம ராஜு,  நாட்டிற்காகவும், ஆதிவாசிகள் நலனுக்காகவும் அதிகம் போராடினார். இதனால் அவர் இளம் வயதிலேயே தியாகியாகிவிட்டார் என்று அவருக்கு முதலில் புகழாரம் சூட்டினார். இதேபோன்று, இனி வரும் வருடங்களிலும் அல்லுரி சீதாராம ராஜூவின்  பிறந்த தினத்தை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்களின் கனவுக்கு ஏற்ப புதிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டே கடந்த 8 ஆண்டுகளாக தனது அரசு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். அதேபோல் சுதந்திர போராட்ட வீரர் அல்லுரி சீதாராம ராஜு கண்ட ஆதிவாசிகளின் நலனுக்கான கனவுகளுக்காக தான் தனது அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் மோடி கூறினார். அதன்படி நமது நாட்டின் இளைஞர்கள், பெண்கள், ஆதிவாசிகள் ஆகியோர் நாட்டை வழிநடத்துவதன் மூலம் உருவாகும் புதிய பாரதத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும் பிரதர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதனையடுத்து நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி, சுதந்திர போராட்ட வீரர் பசல கிருஷ்ண மூர்த்தியின் வீட்டிற்குச் சென்று, அவரது மகள் பசல கிருஷ்ண பாரதியிடம் ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.