கவர் ஸ்டோரி

பிரதமர் மோடியின் ஒரு நாள் பாதுகாப்புக்கு ரூ.1.17கோடியா?

ஒரு மணி நேரத்திற்கு ரூ.4.86லட்சம் ஒதுக்கீடு..!

Malaimurasu Seithigal TV

 கடந்த சில தினங்களாக இந்தியாவில் ஹாட்டாப்பிக்காக சென்று கொண்டிருப்பது, பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் வாகனம் மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது தான். ஆனால் அவர் செல்லும் பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய விவசாயிகளோ, அவ்வழியாக பிரதமர் வருவது எங்களுக்கு தெரியாது என்றனர்.  முதலமைச்சரோ, பிரதமர் சாலை மார்க்கமாக வருவது எங்களுக்கு தெரியாது என்றார். இருப்பினும் பிதமரின் பாதுகாப்பு குறைப்பாட்டுக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொதுவாக சமுதாயத்தில் ஒரு பிரபலத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்படுவது வழக்கம். சினிமா பிரபலங்களாக இருக்கலாம், அல்லது அரசியல் தலைவர்களாக இருக்கலாம், தொழிலதிபர்களாக இருக்கலாம், இப்படி சமுதாயத்தில் அந்தஸ்து படைத்தவர்களுக்கு, அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலுக்கு ஏற்ப குறிப்பிட்ட வகை பாதுகாப்பு வழங்கப்படும். 

அப்படியிருக்கையில், நாட்டின் பிரதமருக்கு எஸ்பிஜி எனப்படும் பாதுகாப்பு குழு வழங்கப்பட்டிருக்கும். பிரதமரோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ வெளியே எங்கு செல்ல வேண்டும் என்றாலும் இந்த வகை பாதுகாப்பு படையினரும் உடன் செல்வார்கள். அந்த வகையில் பஞ்சாப் சென்றிருந்த போது பிரதமருடன் சென்ற எஸ்பிஜி பாதுகாப்பு குழுவுக்கு நாள் ஒன்ரஜ்றுக்கு 1.17கோடி ரூபாய் செலவு ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1985ம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு ராணுவத்தின் ஒரு பிரிவினரால் எஸ்பிஜி படை அமைக்கப்பட்டது. 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் எஸ்பிஜி சட்டத்தில் சிறிய திருத்தமும் கொண்டு வரப்பட்டது. இதில் அனைத்து முன்னாள் பிரதமர்கள் மற்றும் பிரதமரின் குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்குவது என மாற்றியமைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் 1999ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசு இதனை மீண்டும் மறுசீராய்வு செய்தது.

அதன் படி ஒரு பிரதமர் ஆட்சியில் இருந்து அகன்றபின், முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டுக்கு பின் ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு இருக்கும் அச்சுறுத்தல்களை ஆய்வு செய்து பாதுகாப்பு குறைக்கப்படும் என திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி தான் கடந்த 2019ம் ஆண்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இந்த பாதுகாப்பில் இருந்து விலக்கப்பட்டனர்.கடந்த 2021 - 22 பட்ஜெட்டின் படி பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு 429 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் படி ஒரு நாளை 1.17 கோடி ரூபாயாகும். ஒரு மணி நேரத்திக்கு ஆகும் செலவு 4.86 லட்சம் ரூபாயாகும். எஸ்பிஜி செலவானது கடந்த 2018 - 19ல் 385 கோடி ரூபாயாக இருந்தது. அதன் பின்னர் 2019 - 20ல் 535 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதன் பின்னர் 2020 - 21ல் 592 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2021 - 22 பட்ஜெட்டில் 429.05 கோடி ரூபாயாக ஒதுக்கீடு குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இந்த எஸ்பிஜி பாதுகாப்பில் பிரதமர் மோடி மட்டுமே உள்ளார். இதற்கிடையில் இந்த எஸ்பிஜி பனியில் சுமார் 3,000 பேர் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இத்தனை பலம் வாய்ந்த பாதுகாப்பு வீரர்கள் பிரதமரை சுற்றியிருந்தும் பிரதமரின் வாகனம் 20 நிமிடங்கள் ஒரே நேரத்தில் நின்றதும், பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் திரும்பி சென்றதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரதமர் கலந்து கொள்ளவிருந்த தமிழக பாஜக பொங்கல்விழாவும் கூட ஒத்திவைக்கப்பட்டது. ஒரு நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு வழங்குவதில் சிக்கில் என்றால், மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும் என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.