கவர் ஸ்டோரி

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி...அடுத்து சிவசேனாவை கைப்பற்றுகிறாரா ஷிண்டே?

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

Malaimurasu Seithigal TV

மகாராஷ்டிர அரசியலில் ஒவ்வொரு நாளும் பெரும் திருப்பங்களுக்கு உள்ளாகி வருகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே  உத்தவ் தாக்கரேக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் வெளியேற வேண்டும் என்பது தான் அவரது கோரிக்கை.

எதிர்பாராத திருப்பம்...

தனது கோரிக்கையை கட்சி நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் குஜராத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். பிறகு அங்கிருந்து தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்குச் சென்றார். அங்கிருந்தவாறே தனது அடுத்தகட்ட திட்டங்களை வகுத்தார். நாளுக்கு நாள் அவரை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

உடனே மும்பை திரும்பிய ஷிண்டே பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இருவரும் இணைந்து ஆளுநர் மாளிகைக்குக் சென்று ஆட்சியமைக்க உரிமை கோரினர். அனைவரும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதலமைச்சராவார் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக அறிவிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டார். ஷிண்டேவின் அரசில் தாம் பங்குபெறப் போவதில்லை என தெரிவித்திருந்த பட்னாவிஸ் தனது கட்சித் தலைமை கேட்டுக் கொண்டதால் துணை முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

ஷிண்டேவின் பலம்

முதலமைச்சராக ஷிண்டே பதவியேற்றதைத் தொடர்ந்து தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க ஜூலை  4 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சிவசேனா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தலைமை தாங்கும் ஏக்நாத் ஷிண்டே தனது அணியில் 40 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் 106 சட்டமன்ற உறுப்பினர்கள், சிறிய கட்சிகள் மற்றும் சில சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு உள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் 164 வாக்குகள் பெற்று ஏக்நாத் ஷிண்டே வெற்றி பெற்றுள்ளார். சில சிவசேனா தலைவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஏக்நாத் ஷிண்டே தோற்க வாய்ப்புள்ளதாகக் கூறினார்கள். ஆனால் அது போல எதுவும் நடக்கவில்லை. ஷிண்டே அணியில் உள்ள அனைத்து சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாகத் தான் வாக்களித்துள்ளனர்.

தன்னை ஆதரிக்கவில்லை என்றால்...ஷிண்டேவின் எச்சரிக்கை!

உத்தவ் தாக்கரே தலைமையில் இயங்கும் சிவசேனா கட்சியின் 16  சட்டமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று சிவசேனாவின் தலைமைக் கொறடா பாரத் கோகவாலே (ஏக்நாத் ஷிண்டே அணி) சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார். 16  சட்டமன்ற உறுப்பினர்களையும் இடை நீக்கம் செய்ததற்கான அறிக்கை அளிக்கப்படும் என்ற தகவலை சபாநாயகர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது.

அப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டால் அவர்களால் சட்டமன்ற நிகழ்வுகளில் பங்குபெற முடியாது. உத்தவ் தாக்கரே அணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அவருடனே நீடிப்பார்களா அல்லது ஷிண்டே அணிக்கு சென்று விடுவார்களா என அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

- ஜோஸ்