கவர் ஸ்டோரி

சித்தராமையா கடந்து வந்த பாதை..!

Malaimurasu Seithigal TV

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த நிலையில், கடந்த ஒரு வாரமாக யார் முதலமைச்சர் என்றே  அறிவிக்காமல் இருந்து வந்தது காங்கிரஸ். முதலமைச்சராக பொறுப்பேற்பது கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரா அல்லது கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையாவா என குழப்பம் நீடித்து வந்தது. 

கடந்த 2018ம் ஆண்டு காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர்கள் கொத்துக்கொத்தாக கட்சி மாறியபோது, கட்சியின் மாநிலத் தலைவராக குதிரை பேர சம்பவங்களில் சிக்காமல் கடுமையாக உழைத்து வந்த டி.கே.சிவகுமார், நடந்து முடிந்து தேர்தலில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

இந்நிலையில் முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக  காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சித்தராமையாவுக்கு 2 வது முறையாக இவ்வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு, மாநில அரசியலில் 45 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த சூப்பர் சீனியர் என்பது தவிர்த்து வேறு காரணங்கள் இருக்க முடியாது என்பதே உண்மை.

அப்படி அவர் கடந்து வந்த பாதை தான் என்ன?

1978ம் ஆண்டு அவசரநிலை காலகட்டத்தில், வழக்குரைஞர் தொழிலைத் துறந்து அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த அவர், 1983ம் ஆண்டு பாரதீய லோக் தளம் கட்சியின் சார்பில் மைசூரின் சாமுண்டீஸ்வரி தொகுதியில் வெற்றிபெற்று முதன்முறையாக எம்எல்ஏவாக பதவியேற்றார். பின்னர் ஜனதா கட்சியில் 1985ம் ஆண்டு இணைந்து மீண்டும் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்று நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

தொடர்ந்து 1992ம் ஆண்டு ஜனதா தள கட்சியின் பொதுச்செயலாளராக பதவியேற்று, மாநில துணை முதலமைச்சராக பதவி வகித்தார் சித்தராமையா. 1999ம் ஆண்டு ஜனதா தளம் இரண்டாக உடைந்தபோது, மதச்சார்பற்ற ஜனதா தளம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றார். பின்னர், 2004ம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், 2006ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி தனித்து செயல்பட்டார். இந்நிலையில் சோனியா காந்தியின் அழைப்பை ஏற்று மீண்டும் காங்கிரசில் சித்தராமையா இணைந்தார்.

2009ம் ஆண்டு பாஜக ஆட்சியைப் பிடித்தபோது, மீண்டும் எம்எல்ஏவாகவும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட அவர், 1977ம் ஆண்டுக்குப்பின் 5 ஆண்டுகால ஆட்சியை தடையின்றி நிறைவு செய்த முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார்.

2019ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பாஜக ஆட்சியமைத்தபோது, சித்தராமையா மீண்டும் எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்த நிலையில் கடந்த 10ம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் தனிப்பெருன்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றிபெற்ற போதும், முதலமைச்சராவது டி.கே.சிவகுமாரா அல்லது சித்தராமையாவா என 5 நாட்களாக குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் டெல்லிக்கு சென்ற இருவரும் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து வந்தனர். இதைத்தொடர்ந்து முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பொறுப்பேற்கவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து 2ம் முறையாக சித்தராமையா முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

தொடர்ந்து நாளை கர்நாடகாவின் முதலமைச்சராக சித்தராமையா பதவி ஏற்கவுள்ள நிலையில், கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு டி.கே.சிவகுமாரும் இதற்கு முழு ஆதரவு கொடுத்துள்ளார். இதன் மூலம் கடந்த 5 நாட்களாக நீடித்த வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு  வந்துள்ளது.