கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகளையும், தகவல்களையும் பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. ஒரு செல்போனும் இன்டெர்நெட்டும் இருந்தால் போதும், ஆளாளுக்கு தனக்கு தோன்றுவதை வாட்ஸ் அப், ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத் தளங்களில் கொட்டித் தீர்க்கின்றனர்.
மதம், ஜாதி, இனம், மொழி ஆகியவை குறித்து சகட்டு மேனிக்கு தன்னுடையது தான் பெரியது எனக் கூறுவதும், தன்னோடது அல்லாதவர்களை பற்றி அவதூறு கூறுவது, அவர்களை கீழ்தனமாக நடத்துவது போன்ற பல்வேறு வீடியோக்களை நம்மால் காண முடிகிறது. இது பத்தாது என்று பப்ஜி மதன் போன்றோர் பெண்களையும், குழந்தைகளையும் பற்றி ஆபாசமாக பேசி வீடியோ போடுவதும் வாடிக்கையாகி வருகிறது.
இதுபோன்ற புகாரில் பப்ஜி மதன் தற்போது சிறையில் உள்ள நிலையில், ஜிபி.முத்து, ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட டிக்டாக் மூலம் பிரபலமாகி தற்போது யூடியூப், முகநூல் வாயிலாக ஆபாச கருத்துகளை பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இவற்றிற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில், புதிதாக பதவியேற்றுள்ள சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு சமூக வலைத்தளங்களில் சுய விளம்பரத்திற்காக அவதூறு பதிவுகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகவலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள்/ பத்திரிகைகள் வாயிலாக பலரும் சமுதாயம், அரசியல் உள்ளிட்டவை சார்ந்த ஆக்கப்பூர்வமான தகவல்களைப் பகிர்ந்து வருவதாகவும், ஆனால் சிலர் சுய விளம்பரத்துக்காக சமூகவலைதளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளை பதிவு செய்து , சட்டம் ஒழுங்குப் பிரச்னையை தூண்டி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பிட்ட சிலர் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சொந்த ஆதாயத்திற்காகவும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து மலிவான தரம் தாழ்ந்த கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும், இத்தகைய அநாகரிகமான பதிவுகள் பொது அமைதியை சீர்குலைப்பதற்கும். குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கும் வித்திடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையைப் பொறுத்தவரை, சமூகவலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் கட்சி, சாதி, மதம் சார்ந்த இரு தரப்பினருக்கிடையே மோதல்களைத் தூண்டும் வகையிலும் , பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும், குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்தால் அதற்குக் காரணமாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இத்தகைய சட்ட நடவடிக்கைகள் காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாண்டு மே மாதம் முதல் தற்போது வரையில் மாநிலம் முழுவதும் சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட நபர்கள் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்குகளில் எல்லை மீறிய அளவில் அவதூறுப் பதிவுகளை மேற்கொண்ட 16 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துக்கள் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையிலும், அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகார்களில் முகாந்திரம் இருக்கும் பட்சத்திலும் மட்டுமே காவல் துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.