கவர் ஸ்டோரி

ஆசிரியரின்  அலட்சியத்தால் பறிபோன மாணவனின் கண்பார்வை....!!

Malaimurasu Seithigal TV

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற ஔவையார் வாக்கிற்கு இணங்க, கல்வி அறிவால், அகக் கண்கள் திறக்கப்படும். ஆனால், பள்ளிக்கு சென்றதால் மாணவன் ஒருவனின் பார்வை பறிபோயிருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்துகிறது.  

செங்கல்பட்டு மாவட்டம் அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் நித்தியானந்தம்- சுதா தம்பதியர். இவர்களது மூத்த மகன், சுதாகர் சிதண்டி மண்டபத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். 

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சுதாகர், நள்ளிரவில் வலது கண்  வலிப்பதாக கூறி அழுதுள்ளான். பெற்றோர் விசாரித்ததில், பேனா கொடுக்காததால், சக மாணவன் ஸ்கேலால் அடித்துவிட்டான் என்றும் அதனால் கண் வலிப்பதாகவும் கூறியுள்ளான். மேலும், இது குறித்து ஆசிரியருக்கு தெரியும் என்றும் அவர்கள்தான் வீட்டில் சொல்ல வேண்டாம் என்று எச்சரித்ததாவும் கூறியுள்ளான். 

இதனால் அதிர்ந்து போன பெற்றோர் மறுநாள் காலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் கருவிழியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

அதன்படி எழும்பூர் குழந்தைகள் நல மருத்தவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், மாணவனை சோதித்த மருத்துவர்கள், கருவிழி கிழிந்து விட்டதால்  90 சதவீதம் பார்வை பறிபோய்விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்ட  ஏழைப் பெற்றோர் செய்வதறியாது உடைந்து போயினர்.

இது குறித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கும் சுதாகரின் தாய், தனது மகனுக்கு மீண்டும் கண்பார்வை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசுக்கு உருக்கமான கோரிக்கை விடுக்கிறார்.