கவர் ஸ்டோரி

நண்பனின் மனைவியை மறுமணம் செய்த இளைஞர்...என்ன காரணம் தெரியுமா?

கொரோனாவால் உயிரிழந்த நண்பனின் மனைவியை திருமணம் செய்த இளைஞரின் நல்ல மனதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Tamil Selvi Selvakumar

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள முள்ளூர் கிராமத்தை சேர்ந்த சேத்தன்குமார் என்பவருக்கும், ஹனூர் டவுனை சேர்ந்த அம்பிகாவுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சேத்தன்குமார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வந்தார். 

மருத்துவமனையில் வேலை பார்ப்பவர் என்பதால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கெல்லாம் சிகிச்சை கொடுத்து வந்துள்ளார். இதற்கிடையில் கொரோனா 2 வது அலையின் போது சேத்தன்குமார் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கணவர் இறந்ததால் மனம் உடைந்த மனைவி அம்பிகா தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது கணவர் சேத்தன்குமாரின் நெருங்கிய நண்பரான லோகேஷ் என்பவர் தற்கொலைக்கு முயன்ற அம்பிகாவை மீட்டு காப்பாற்றியுள்ளார். 

இதனையடுத்து கொரோனாவால் உயிரிழந்த நண்பனின் மனைவியின் கஷ்டத்தை உணர்ந்த லோகேஷ், அம்பிகாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இவரின் விருப்பத்தை அம்பிகாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்பின்னர் இருவீட்டாரின் சம்மதத்தோடும் வாழ்த்துகளுடனும் இனிதே திருமணம் நடைபெற்றது.

மேலும், கொரோனாவுக்கு பலியான நண்பரின் மனைவியை மறுமணம் செய்த லோகேஸின் செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.