கவர் ஸ்டோரி

பள்ளி மாணவி தற்கொலை...உறவினர்கள் சாலை மறியல்!

Malaimurasu Seithigal TV

திருவள்ளூர் அடுத்த கீழச்சேரி ஊராட்சியில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.இந்தப் பள்ளி விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படிக்கும் திருத்தணி தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி  இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்று விட்டனர். அப்போது தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அப பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் சந்திர தாசன், துணை ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகேர்லா செபாஸ் கல்யாண், திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் இது குறித்து விடுதி காப்பாளர்கள், பள்ளி நிர்வாகிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்த மாணவியின் உறவினர்கள் அவர்கள் ஊரில் அரசுப் பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.