கவர் ஸ்டோரி

அமைச்சராகப்போகும் உதயநிதி ஸ்டாலின்..! மீண்டும் ஒரு பெரிய அசைண்ட்மெண்ட்..!

கொங்கு மண்டலத்தில் திமுக கொடி..!

Malaimurasu Seithigal TV

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றும் கூட, எதிர்பார்க்கப்பட்ட பல இடங்களில் தோல்வியை தழுவியது. குறிப்பாக கொங்கு மண்டலம், கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற மாவட்டங்களில் திமுகவுக்கு பெரிய சருக்கல் ஏற்பட்டது. ஆனால், இதே தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த தேர்தலின் போது, திமுகவிற்கு வாங்கு வங்கி அதிகமாகவே இருந்தது. அப்படி இருக்க ஆட்சி நாற்காலியில் அமர்ந்தாலும், திமுக தோல்வியுற்ற தொகுதிகளில், களப்பணி ஆற்ற ஒரு குழுவை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். 

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலை கணக்கில் கொண்டு பிற கட்சிகளில் கொங்கு மண்டலத்தில் வாக்கு வங்கி வைத்துள்ள நபர்களையும், நிர்வாகிகளையும் வளைத்து போட்டு வருகிறது திமுக. இதற்கு பக்க பலமாக இருப்பது அமைச்சர் செந்தில்பாலாஜி. அதிமுக, அமமுக-வில் இருந்து மாஜி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களை திமுக பக்கம் இழுப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார் அவர். அதன் படி அமமுக-வின் முக்கிய பிரமுகர்களை தூக்கிய அவர், தற்போது அதிமுக பக்கம் தனது வலையை விரித்துள்ளார். விரையில் அந்த வலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 15 பேர் மற்றும் மாஜி அமைச்சர்களும் விழவுள்ளதாக சல சலக்கப்படுகிறது. 

மற்றொரு புறம் ஊழல் வழக்கை கையில் எடுத்துள்ளது திமுக. ஆட்சியில் இல்லாத போதே அப்போதைய அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வந்த ஸ்டாலின், தற்போது முதலமைச்சர் ஆன உடனே, அந்த ஊழல் வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆரம்பித்து விட்டார். அதன் ஒரு டிரைலர் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனை. 

இப்படிப்பட்ட சூழலில், திமுக தோல்வியின் உண்மை நிலவரத்தை தெரிந்துக் கொள்ள, ஒரு தனியார் நிறுவனம் மற்றும் திமுகவை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகளை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். இதற்கு மூளையாக செயல்படுவது ஸ்டாலினின் பின்புலமான அவரது மருமகன் சபரீசன். இந்த விசாரணைக் குழுவினர் தோல்வியடைந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலாளர்கள் என அடிமட்ட நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி முடித்து அதனை சபரீசனிடம் சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில், அடுத்த ஆப்ரேஷன் தயாராகும் என்கின்றனர் திமுகவினர்.

அடுத்ததாக, இளம் வாக்காளர்களை கவரும் வகையில், திமுக பல்வேறு திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இளைஞர்கள் மற்றும் பெண்களை குறிவைத்தால், அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் எதிர்கால வாக்காளர்களை இழுக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக தெரிகிறது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தை எப்படி கைப்பற்றுவது என யோசித்துக் கொண்டிருந்த திமுகவிற்கு, லட்டு போல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ''உங்கள் ஊரில் ஸ்டாலின்'' என்ற திட்டத்தின் கீழ் மேற்கு மண்டலத்தில் பல புகார்கள் வந்துள்ளதாகவும், அந்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து மக்கள் மனதில் நற்பெயர் வாங்க திட்டமிட்டிருக்கிறாராம் ஸ்டாலின். இது தவிர மேற்கு மண்டலத்திற்கு சாதகமான திட்டங்கள் எதிர்வரும் பட்ஜெட்டில் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர் திமுக வட்டாரங்கள். 

கொங்கு மண்டலத்தை கைப்பற்றுவது, தோல்விக்கான காரணங்களை கண்டுப்பிடிப்பது, மாற்றுக் கட்சியினரை திமுக பக்கம் இழுப்பது என, இவை அனைத்தையும் கையாளுவது உதயநிதி தான் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே உதயநிதியை, கோவை பக்கம் சென்று சில நாட்கள் தங்கி தோல்விக்கான காரணம் குறித்து ஆராய வைக்கலாம் என ஸ்டாலின் கருதுவதாக தகவல் வெளியாகியது. இதற்கிடையில் உதயநிதியை அமைச்சராக்கும் முயற்சியிலும் ஸ்டாலின் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால் அவரது சினிமா படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், ஏற்கனவே கமிட் ஆன படங்களை முடித்து விட்டு, முழு நேரமாக அரசியலில் இறங்கும் பொருட்டு, அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதகவும், அதற்கு முன்பு இது போன்ற அசைண்ட்மெண்ட்களை உதயநிதி எடுத்து செய்ய வேண்டும் என ஸ்டாலின் எதிர்பார்ப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.  இந்த நிலையில், புது யுக்திகளை கையாண்டு, ஒரு புறம் மகன், மற்றொரு புறம் மாப்பிள்ளை என குடும்ப உறுப்பினர்கள் மூலம் கொங்கு ஆபரேஷனில் குதித்துள்ளார் ஸ்டாலின். ஆக உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் திமுக கொடி பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.