கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரைச் சேர்ந்தவர் அசோக். காய்கறி மற்றும் பழ சந்தையில் பழ வியாபாரம் செய்து வந்த இவர் வேலையில்லாத நேரங்களில் திருட்டில் ஈடுபடுவது வழக்கம்.
குறிப்பாக விலை உயர்ந்த கே.டி.எம். பைக்குகளை அபேஸ் செய்யும் அசோக், அதனை வேறொருவரிடம் கொடுத்து கிடைக்கும் பணத்தை நண்பரிடம் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பைக் திருடன் அசோக்கை கைது செய்த போலீசார் காவல்நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரித்தனர்.
ஏற்கெனவே பல்வேறு காவல்நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அசோக்கை போலீசார் தங்களுக்கே உரிய பாணியில் விசாரிக்கத் தொடங்கினர்.
இதில் அசோக் தெரிவித்த காரணம் ஒன்று, காவல்துறையினரையே கதிகலங்க வைத்தது. அதாவது அசோக்குக்கு, பெங்களூரு கிரி நகரைச் சேர்ந்த ஒருவருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது.
அசோக்குக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்து, அவரது மனைவி பிரிந்து சென்றார். மனைவியின் பிரிவால் நிலைகுலைந்து போன அசோக்கை, அவரது நண்பரும், நண்பர் மனைவியும் கரிசனையுடன் கவனித்து வந்தனர்.
நண்பனின் மனைவியை தங்கையைப்போல் என்றும் அல்லாமல் ஒரு தாயாவே கருதினார் அசோக். இந்நிலையில் நண்பனின் மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதைக் கேள்விப்பட்டு துடித்துப் போனார்.
மன உளைச்சலில் இருந்த தன்னை தாய்போல பார்த்துக் கொண்டவருக்கு நாம் செய்யப்போகும் பிரதிபலன் என்ன? என பல நாட்களாக எண்ணியவர், திருடியாவது சிகிச்சைக்கு தேவையான பணத்தை கொடுக்க முடிவெடுத்தார்.
இதற்காக ஏற்கெனவே சிறையில் இருந்து வெளியே வந்த சதீஷ்குமார் என்பவருடன் இணைந்து கே.டி.எம். பைக்குகளை குறி வைத்து திருடினார்.
நண்பனின் மனைவியின் சிகிச்சைக்காக பைக் திருட்டில் ஈடுபட்டவரின் இந்த செயல் பெங்களூரு போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.