கவர் ஸ்டோரி

வரும் செப்டம்பர் 15 முதல் தொடக்கம்...யாருக்கெல்லாம் ரூ.1000 உரிமைத்தொகை?

Tamil Selvi Selvakumar

ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், பணம் யாருக்கெல்லாம் கிடைக்கும், கிடைக்காது என்பது தொடர்பான தகவலை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம், வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு துரிதப்படுத்தியுள்ளது.

தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதை அடுத்து, இதுதொடர்பாக பல்வேறு தகவல்களும் வெளியாகியுள்ளன.

ஏழை, எளிய, நடுத்தர குடும்பப் பெண்களுக்கு  ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை சென்றடைய வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுவதற்கான கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்கும் வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற்றுவரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ஆகியோர் உரிமைத் தொகையைப் பெற இயலாது என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

P.H.H என்ற வறுமைக் கோட்டுக்குக்குக் கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோ அரிசி வாங்கும் P.H.A.A.Y குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிமைத் தொகை நிச்சயம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரிப் பெண்களின் தாயார்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெற ரேஷன் அட்டையில் மாற்றம் ஏதும் செய்யத் தேவையில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவரவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்த அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்க இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதுடன், வீடுகளில் எத்தனை சமையல் கேஸ் சிலிண்டர்கள் உபயோகிக்கப்படுகின்றன என்ற ஆய்வைத் தொடங்கியுள்ளது.