க்ரைம்

12 ஆம் வகுப்பு மாணவியை கர்பமாக்கிய 10ஆம் வகுப்பு மாணவன் கைது...

முசிறி  அருகே 12ஆம் வகுப்பு மாணவியை கர்பமாக்கிய 10ஆம் வகுப்பு மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Malaimurasu Seithigal TV

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அய்யம்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அதனால், அருகில் உள்ள மூவானூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவப் பணியாளர்கள், அவர் கர்ப்பிணியாக உள்ளதாகவும் குழந்தை பிறப்புக்கான வலி ஏற்பட்டுள்ளதாக கூறியதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து சிறுமி 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவருக்கு ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், தம்பி முறைகொண்ட 16 வயது சிறுவன், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்று தெரியவந்தது. கொளக்குடி அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் அச்சிறுவன், பல முறை அச்சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து திருச்சி அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.