Balaji Murugadoss police raid 
க்ரைம்

'பிக்பாஸ்' பாலாஜி வீட்டில் போதைப்பொருள் ரெய்டா?.. வாரண்ட் இல்லாமல் வந்த 15 போலீஸ்! முதல்வர் விஜய்யை கேள்விகளால் விளாசி பதிவு

நான் இரத்தப் பரிசோதனைக்குத் தயாராக இருக்கிறேன். ஆனால் உங்கள் காவல் துறைக்கு வெட்கமாக இல்லையா!. 15 காவலர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள், அவர்கள் கண்டுபிடித்ததெல்லாம் 3 பூனைகளும் ஒரு நாயும்தான்!

Vinvizhi Leninton

'பிக்பாஸ்' புகழ் பாலாஜி முருகதாஸ் வீட்டில் நேற்று (நவ 08) போதைப்பொருள் தொடர்பான ரெய்டு ஒன்று நடந்துள்ளது. தனது வீட்டில் நடந்த இந்த வாரண்ட் இல்லாத ரெய்டை குறிப்பிட்டு அவரது சமூகவலைதளப்பக்கத்தில் ஒரு பதிவொன்றினை பதிவிட்டு முதல்வரை குறிப்பிட்டது பேசுபொருளாக மாறியுள்ளது.

'பிக்பாஸ்' மூலம் அறியப்பட்டவர்தான் பாலாஜி முருகதாஸ். மாடலான இவர் பிக்பாஸிற்கு முன்பு ரூபரு மிஸ்டர் இன்டர்நேஷனல் இந்தியா 2018 பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் 2025-ம் ஆண்டில் ஃபயர்' என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் அந்த சமயத்தில் சர்ச்சையாக பேசப்பட்டது.

Balaji Murugadoss drug raid

இவரது வீட்டில், நேற்று நள்ளிரவில் 15 காவல்துறையினர் தனது வீட்டிற்கு வந்ததாக அந்த நடிகர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்காக ஒரு வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் "புகாரளித்தவர் யார் என்று நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்று அதில் முதல்வர் விஜயை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "யார், எதற்காகப் புகார் கொடுத்தார்கள் என்று நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்!. நான் அவர்களிடம் பலமுறை கேட்டேன், ஆனால் அவர்கள் எதையும் தெரிவிக்கவில்லை. நான் இரத்தப் பரிசோதனைக்குத் தயாராக இருக்கிறேன். ஆனால் உங்கள் காவல் துறைக்கு வெட்கமாக இல்லையா!. 15 காவலர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள், அவர்கள் கண்டுபிடித்ததெல்லாம் 3 பூனைகளும் ஒரு நாயும்தான்! ஆனால் அவர்கள் எந்த அடிப்படையில் வந்தார்கள் என்று நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்!. நான் சுத்தமானவன் என்பதால், சோதனை வாரண்ட் எதுவும் இல்லை என்றாலும், நான் அவர்களை வீட்டிற்கு அழைத்தேன். ஆனால் காவல்துறையின் இந்தச் செயலுக்கு எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்துப்படி, எந்த வாரண்டும் இல்லை, யார் புகாரளித்தது?, காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு தகுந்த பதிலில்லை அளிக்கவேண்டும் என்று தனது கருத்தினை முன்வைத்துள்ளார். இது குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.